அகிலம் போற்றும் ஆனித் திருமஞ்சனம்

எது இன்பம் என்பதற்கு திருஞானசம்பந்தர் ஒரு விளக்கம் அளிக்கின்றார். நீண்ட மாடங்கள் உடைய தில்லைத் திருத்தலம். அங்கே இறைவன் பிறை மதி முடி சூடி ஆடும் பேரம்பலமாகிய சிற்றம்பல மேடை. அங்கு ஆனந்த நடனம் புரியும் பொற் கழல்களான திருவடிகளை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பதுதான் இன்பத்துள் இன்பம் என்கிறார்.

நிறை வெண் கொடி மாட நெற்றிநேர்
பிறை வந்து இறை தாக்கும் பேரம்பல தில்லை
சிறை வண்டறை யோவாச் சிற்றம்பல மேய
இறைவன் கழல்ஏத்தும் இன்பம் இன்பமே

பொதுவாக மனிதப் பிறவியில் இருந்து விடுபட வேண்டும் என்பதையே ஒவ்வொருவரும் தங்கள் பிரார்த்தனையாக வைப்பார்கள். ஆனால் தில்லைக் கூத்தனைப் பார்த்தபிறகு, ‘‘எனக்கு மனிதப்பிறவி அவசியம் வேண்டும்’’ என்ற பிரார்த்தனையை திருநாவுக்கரசு சுவாமிகள் வைக்கிறார். அழகான வளைந்த புருவம். சிவந்த இதழ்கள். அதிலே சிந்தும் புன்னகை. கங்கையால் ஈரமான சடைமுடி. பவளம் போன்ற சிவந்த திருமேனி. பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சு. பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடி.இத்தனை அழகையும் காணும் இந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்றால் மனிதனாக பிறப்பது கூட ஒரு பாக்கியம் தான். குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே! பஞ்சபூதங்களில் ஆகாய ஷேத்திரம். பஞ்ச சபைகளில் பொற்சபை. அங்கே படைத்தல் காதல் அழித்தல் மறைத்தல் அருளல் எனும் ஐந்தொழில்களையும் ஆனந்த தாண்டவமாகக் காட்டியருளும்  சிவகாம சுந்தரி சமேத மத் ஆனந்த நடராஜ மூர்த்தி. கோயில் என்றால் சைவத்தில் சிதம்பரம் தான் கோயில். இறைவன் அருள் எல்லைக்கு ஓர் இருப்பிடம் தான் தில்லைத் திருத்தலம்.

தீர்த்தம் என்பது சிவகங்கையே
ஏத் தரும் தலம் எழில் புலியூரே
மூர்த்தி அம்பலனது
திருவுருவே
என மூர்த்தி, தலம்,
தீர்த்தம்

என்ற மூன்றாலும் சிறப்புமிக்கது தில்லைத் திருக்கோயில். உலகத்தின் இதயமாக விளங்கும் திருத்தலம் என்பார்கள். இத்தலத்திற்குத் தான் எத்தனை பெயர்கள்?மன்று, அமலம், சத்து, உம்பர், இரண்மயகோசம், மகத், தனி, புண்டரிகம், குகை, வண்கனம், சுத்தம், பரம், அற்புதம், மெய்ப்பதம், கழுனாவழி, ஞானசுகோதயம், சிதம்பரம், முத்தி, பரப்பிரம்மம், சபை, சத்தி, சிவாலயம், பொது, சிற்றம்பலம், புலியூர், பெரும்பற்றப்புலியூர் முதலிய பல பெயர்கள் உள்ளன.அந்த நடராஜ மூர்த்திக்குத்தான் எத்தனை விழாக்கள்? அதில் முக்கியமான விழா ஆனித் திருமஞ்சனம். மஞ்சனம் என்றால் நீராட்டம்.
“மங்கல மஞ்சன மரபினாடியே” என்பது கம்பராமாயணம்.

சிவன் அபிஷேகப் பிரியனல்லவா…. அவனுக்கு குளிரக் குளிர, நீராட்டம் நடப்பதை நம் கண்களால் காணும் பொழுது, நம்முடைய உள்ளம் குளிர்கிறது. எண்ணங்கள் நிறைகிறது. அதன்பிறகு நடப்பதெல்லாம் நன்மையாகவே நடக்கிறது. அதனால் தானே உலகமெங்கும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், தில்லைத் திருத்தலத்தில் ஆனித்திருமஞ்சன நன்னாளிலே கூடுகிறார்கள்.கார்காலம், குளிர்காலம், முன்பனிக்காலம், பின் பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் என ஆறு பருவங்கள் ஓர் ஆண்டில் உண்டு.ஓர் நாளை வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என்று ஆறு பொழுதுளாகப் பிரித்தனர். இந்த ஒவ்வொரு பொழுதும் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் வேறு வேறு கால அளவாக இருக்கும். மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். அந்த வகையில் மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியல் நேரம்; மாசி மாதம் காலைப் பொழுது; சித்திரை மாதம் உச்சிக் காலம்; ஆனி மாதம் மாலை நேரம்; ஆவணி மாதம் இரவு நேரம்; புரட்டாசி மாதம் அர்த்த ஜாமம்; இதை அடிப்படையாக கொண்டுதான் ஆலயங்களில் தினமும் ஆறு கால பூஜை நடத்துகிறார்கள். இந்த ஆறு காலங்களில் நடக்கும் பூஜைகளும், வழிபாடுகளும் ஆகம விதிகளின் படி முக்கியமானவை. ஆறு காலத்தைக் குறிக்கும் வகையில் சிவாலயங்களில் நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு தடவை அபிஷேகம் செய்வார்கள்.இதில் மூன்று அபிஷேகங்கள் திதியை அனுசரித்தும், மூன்று அபிஷேகங்கள் நட்சத்திரத்தை அனுசரித்தும் நடத்துகிறார்கள். மாசி சதுர்த்தசி, ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி ஆகிய நாள்களில் திதியை வைத்து அபிஷேகம் நடத்துகிறார்கள்.

சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் நட்சத்திரத்தை வைத்து அபிஷேகம் நடத்துகிறார்கள்.இந்த ஆறு அபிஷேகங்களில் மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம் ஆகிய இரு நாட்களில் நடைபெறும் அபிஷேக பூஜைகள் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.அதிலும் ஆனி மாத உத்திரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் மிக மிகச் சிறப்பு வாய்ந்தது. ஆனி பௌர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு “ஆனி உத்திரம்” என்றும் ஒரு பெயர் உண்டு. இந்தப் புண்ணிய தினத்தில் சிவாலயங்களுக்குச் சென்று இறைவ னையும் இறைவியையும் வழிபட்டால் வாழ்வு சிறக்கும். ஆச்சரியங்கள் நிறைந்த திருவண்ணாமலையிலும் ஆனி திருமஞ்சனம் மிக விமரிசையாக நடைபெறும். அபிஷேக, அலங்காரம் முடிந்த பிறகு நடராஜ ருக்கு 16 வகை தீபங்களால் ஷோடச ஆராதனைக்
காட்டுவார்கள்.சுமங்கலிகள் இந்த விழாவில் கலந்து கொண்டால் நீடூழி வாழ்வார்கள். கன்னிப்பெண்கள் பங்கேற்றால் விரைவில் அவர்களுக்கு உரிய இடத்தில் திருமணம் நடைபெறும். சிதம்பரம், உத்தர கோசமங்கை உள்பட சில தினங்களில் நடைபெறும் நடராஜர் அபிஷேகம் புகழ் வாய்ந்தது. இந்த தலங்களில் அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து நடராஜரை வழிபடுவார்கள்.

Related posts

மேஷ ராசிக்காரர்களுக்கு வீட்டு யோகம் தரும் அன்னை

திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள்

தாளம் வழங்கி தமிழ் மறை தந்த வள்ளல்