விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் உயிர் உள்ளவரை இனி சாராய ஆசை இருக்காது: மரணத்தை தொட்டு பிழைத்த தொழிலாளிகள் கண்ணீர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மரணத்தை தொட்டு உயிர்பிழைத்துள்ள தொழிலாளி, ‘இனி உயிர் உள்ளவரை சாராய ஆசை இருக்காது’ என கண்ணீர்மல்க பேட்டி அளித்தார். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்த கருணாபுரத்தைச் சேர்ந்த ெமாட்டையன் (70) என்ற கூலி தொழிலாளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடும் போராட்டத்துக்குப்பின் உயிர் பிழைத்துள்ள அவர் கூறியதாவது: கடந்த 18ம் தேதி மாலை 6 மணியளவில் உடம்பு வலிக்காக 2 பாக்கெட் சாராயம் வாங்கி குடித்தேன். அன்றிரவே வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

காலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது உயிர் பயமாக இருந்தது. அங்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது நல்ல நிலையில் உள்ளேன். இதுவரை இதுபோன்ற சிகிச்சைக்கு நான் வந்ததில்லை. இனிமேல் நான் எக்காரணம் கொண்டும் சாராயம் குடிக்க மாட்டேன். என் உயிர் உள்ளவரை இனி சாராய ஆசை இருக்காது. எனக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உதவிய முதல்வருக்கு நன்றி. இவ்வாறு கண்ணீர் மல்க கூறினார்.

அதேபோல் தேவபாண்டலம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (33) என்பவர், விஷ சாராயம் குடித்து அனுமதிக்கப்பட்டு உயிர்பிழைத்துள்ள நிலையில் அவர் கூறுகையில், ‘கடந்த 18ம் தேதி ஒரு பாக்கெட் சாராயம் வாங்கி குடித்தேன். முதலில் சங்கராபுரம் மருத்துவமனையில் காண்பித்தேன். அங்கிருந்து வீடு திரும்பும்போது மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன்.

மூச்சுத் திணறல் இருந்த நிலையில், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. எனது குடும்பத்தை இனி கவனிக்கனும். எனக்கு சின்ன வயது. குடும்பத்தினரோடு சேர்ந்து வாழணும். ஏற்கனவே என் குடும்பத்தைவிட்டு போய்விடுவேனோ என்ற பயம் இருந்தது. அதிலிருந்து மீட்கப்பட்டுள்ளேன். எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவுக்கு நன்றி’ என்று தனது இரு கைகளை கூப்பியபடி தெரிவித்தார்.

* ‘நாலு சுவத்துக்குள்ள இருந்தா சாராய வியாபாரிகளுக்கு எங்களது தனிமை தெரியும்’: தாய், தந்தையை இழந்த குழந்தைகள் உருக்கம்
கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி சம்பவத்தில் கருணாபுரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த தம்பதியான சுரேஷ் (40), வடிவுக்கரசி (32) ஆகியோர் விஷ சாராயம் குடித்து ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களின் 3 குழந்தைகளான ஹரி (14), ராகவன்(13), கோகிலா (16) ஆகியோர் பரிதவித்தனர். அவர்களுக்கு உறவினர்களும், ஊர் மக்களும் ஆறுதல் தெரிவித்தனர்.

தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.20 லட்சம் நிவாரணம், இக்குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். நடந்த சம்பவம் பற்றி கோகிலா கூறும்போது, ‘19ம்தேதி காலையில் எழுந்தபோது எனது அப்பாவும், அம்மாவும் நன்றாகத்தான் இருந்தனர். அன்று பள்ளிக்கு நாங்கள் கிளம்பினோம். எனக்கு அம்மா தலைசீவி விட்டார். லாலி பப் வாங்க 10 ரூபாய் வாங்கிவிட்டு போனேன். அப்போது பாத்து பத்திரமா போ… என்றார்.

அதுதான் எனது அம்மா கடைசியாக என்னிடம் பேசியது. பின்னர் மாலையில்தான் எனது அப்பாவும், அம்மாவும் இறந்த தகவல் தெரியவந்தது. யாரும் எங்ககிட்ட சொல்லவில்லை. டிவியை பார்த்துதான் தெரியும். 2 பேருக்கும் போன் செய்து பார்த்தால் சுவிட்ச் ஆப் என வந்தது. நாங்கள் மருத்துவமனைக்கும் செல்லவில்லை. பின்னர் வீட்டை திறந்து டிவியை பார்த்தபோது சுரேஷ், வடிவுக்கரசி இறந்து விட்டதாக கூறினர். சாராயம் குடித்த அனைவரும் அனுபவித்துவிட்டனர். ஆனால் விற்றவர்கள் அனுபவிக்கவில்லை.

அவங்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கனும். நாங்கள் அம்மா, அப்பாவை இழந்து நிற்கிறோம். கருணாபுரமே அழிந்து விட்டது. 4 சுவருக்குள் இருந்தால்தான் எங்களது தனிமை தெரியும். எங்களைபோல் அவர்களும் கதறனும். சாராய வியாபாரிகள் வெளியே வந்தால் மீண்டும் அவர்கள் சாராயம் விற்பார்கள். அப்பா வீட்டிற்கு வந்துதான் எப்போதும் சாராயம் சாப்பிடுவார். எங்களுக்கு வீடு இல்ல. அரசு வீடு கட்டித்தரணும். உறவினர்கள் இருந்தாலும் அம்மா, அப்பா இடத்தை யாராலும் இனி நிரப்ப முடியாது’ என்றார். அப்போது அவரது தம்பிகள் 2 பேரும் உடனிருந்தனர்.

* ‘கணவர் வைத்த மிச்ச சாராயத்தை தண்ணீர் என நினைத்து குடித்தேன்’
விஷ சாராயம் குடித்து உயிரிழந்த கருணாபுரம் முருகனின் மனைவி சாரதா புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பினார். அவர் கூறும் போது, கணவர் முருகன் வேலைக்கு சென்று திரும்பியதும் இரவு நேரங்களில் சாராயம் குடிப்பார். சம்பவத்தன்னிக்கு அவர் குடித்துவிட்டு ஒரு சொம்பில் வைத்திருந்த சாராயத்தை தண்ணீர் என நினைத்து நானும் குடித்து விட்டேன்.

இரவில் கணவருக்கும் எனக்கும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி மயக்கம் வந்தது. மருத்துவமனையில் கணவர் இறந்து விட்டார். ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த 5 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு நல்ல முறையில் சிகிச்சை அளித்ததால், நலமோடு திரும்பினேன். தரமான சிகிச்சை அளித்து என் உயிரை காப்பாற்றிய அரசுக்கு நன்றி என்றார்.

Related posts

அரிசி ஆலைகளின் கூடுதல் அரவைக்கு 23,500 மெட்ரிக் டன் நெல் வழங்க காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு

ரூ.1 லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி 1930 பேரிடம் ரூ.87 கோடி மோசடி

சென்னை விமான நிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்