15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு மீண்டும் வருகிறது டபுள் டெக்கர் பேருந்து சேவை: தமிழக அரசு ஆலோசனை

 

சென்னை: சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகளை இயக்க தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சென்னையில் கடந்த 2008ம் ஆண்டு வரை டபுள் டெக்கர் என சொல்லக்கூடிய ஒன்றுக்கு மேல் மற்றொரு தளம் கொண்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. குறிப்பாக தாம்பரத்தில்இருந்து பிராட்வே வரை தடம் எண் 18ஏ என்ற பேருந்து இயக்கப்பட்டது. இந்த பேருந்துகளில் பயணிப்பது என்பது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும். குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் உயரமான கட்டிடங்கள் உள்ள பகுதிகளில் இந்த பேருந்துகள் செல்லும்போது அதன் அழகை வித்தியாசமான கோணத்தில் இருந்து ரசிக்க முடியும்.

பல திரைப்படங்களில் இந்த டபுள் டெக்கர் பேருந்துகள் இடம்பெற்றிருக்கும். அந்த காலகட்டத்தில் சென்னையின் முக்கியமான பகுதியை இந்த பேருந்து கடந்து சென்றதால் இதில் பயணிக்க சுற்றுலா பயணிகளே ஆர்வம் காட்டினார். அதே நேரத்தில் இந்த பேருந்துகளில் அதிகமான எண்ணிக்கையில் பயணிகள் பயணிக்க முடியும். 2008ம் ஆண்டில் மாநகரில் பல்வேறு மேம்பாலங்கள் வந்து விட்டதாலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி விட்டதாலும் இந்த பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டது. அதே நேரம் டிரைலர் பேருந்துகள் எனப்படும் ஒரு பேருந்துக்கு பின்னால் மற்றொரு பேருந்துதை பொருத்தி பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது.

இந்த பேருந்துகளும் குறுகலான சாலை மற்றும் நெரிசலால் நிறுத்தப்பட்டு, தற்போது சாதாரண பேருந்துகள் மட்டுமே இயக்கி வருகிறது. தற்போது தமிழக அரசு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மீண்டும் டபுள் டெக்கர் பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. குறிப்பாக சென்னை இசிஆர் சாலையில் இந்த டபுள் டெக்கர் பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய டபுள் டெக்கர் பேருந்துகள் ஏசி பேருந்துகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறும் போது, ‘‘சென்னையில் டபுள் டெக்கர் பேருந்துகளின் சேவையை மீண்டும் துவங்குவது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். வாய்ப்புள்ள தடத்தில் இந்த பேருந்துகளை மீண்டும் இயக்க உள்ளோம். முதற்கட்டமாக சுற்றுலா இடங்களை இணைக்கும் வகையில் இந்த சேவையை கொண்டு வர ஆய்வு செய்து வருகிறோம்,’’ என்றார்.

* அக்டோபரில் வருகிறது
இந்த மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இந்த வழித்தடம் முடிவு செய்யப்படும். ரூட் முடிவு செய்யப்பட்டவுடன் டபுள் டெக்கர் பேருந்துகளை தயாரித்து செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணி துவங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் இந்த டபுள் டக்கர் பேருந்துகள் சென்னையில் வலம் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

* சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்
டபுள் டெக்கர் பேருந்துகள் சென்னைக்கு வந்தால் அது நிச்சயம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக இருக்கும். சென்னை மக்களும் இந்த ரக பேருந்துகளில் பயணிக்க நீண்ட நாட்களாக ஆர்வமாக இருந்து வருகின்றனர். பலர் இந்த பேருந்துகளை மறந்தேவிட்ட சூழ்நிலையில் தற்போது தமிழக அரசு இந்த டபுள் டெக்கர் பேருந்தை மீண்டும் கொண்டு வருவது பலருக்கு பழைய இனிமையான காலங்களை எல்லாம் நினைவுபடுத்தும்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை