11 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் கிரானைட் குவாரிகள் நடத்த ஏலம்

மதுரை: மதுரை மாவட்டத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கான ஏலத்தை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட மேலவளவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கிரானைட் குவாரிகள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த 2011ல் மேலூர் பகுதிகளில் கிரானைட் எடுக்கப்பட்டதில் விதிகளை மீறி அரசுக்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இதன்பேரில் பல்வேறு நிறுவனங்கள் மீது வழக்குகள் பதிந்து, நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

தொடர்ந்து கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கு 2012, செப்டம்பர் முதல் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு கிரானைட் குவாரிகளை நடத்துவதற்கான ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேக்கிபட்டி கிராமம், அய்யாபட்டி மற்றும் திருச்சுனை ஆகிய அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள கிரானைட் குவாரிகளை 20 ஆண்டுகளுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்க பொது ஏலத்திற்கான டெண்டர் விண்ணப்பங்கள் அக்.30ம் தேதி மாலை 4 மணி வரை தமிழக அரசின் சார்பாக மதுரை கலெக்டரால் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக். 31, காலை 11 மணி முதல் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொது ஏலம் நடத்தப்பட்டு டெண்டர் விண்ணப்பங்களை பிரித்து பரிசீலனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

கனமழை எச்சரிக்கை காரணமாக பெங்களூருவில் நாளை(அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு