100 ஆண்டுகளுக்கு பின் ஜூலை 12ம் தேதி திருச்சி திருமுக்தீஸ்வரர் கோயில் குடமுழுக்கு: இந்து சமய அறநிலையத்துறை தகவல்

சென்னை: திருச்சி பூர்த்திகோவிலில் உள்ள திருமுக்தீஸ்வரர் கோயிலுக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் வரும் ஜுலை 12 அன்று குடமுழுக்கு நடைபெறுகிறது என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் இந்து சமய அறநிலையத்துறையில் திருக்கோயில்களின் மேம்பாட்டிற்கும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தி வழங்கிடும் வகையிலும், பல்வேறு புதிய திட்டங்களும் சேவைகளும், அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2021ம் ஆண்டு மே 7ம் தேதிமுதல் 2024ம் ஆண்டு ஜூலை 8ம் தேதிவரை 1,844 திருக்கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தப்பட்டுள்ளன. 9,141 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள மாநில அளவிலான வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.5,097 கோடி மதிப்பீட்டிலான 20,166 திருப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, இதுவரை 7,648 திருப்பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன.

இந்த அரசு பொறுப்பேற்றபின் வரலாற்றுச் சாதனைகளாக 400 ஆண்டுகளுக்கு பின் கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு, ஆதிகேசவ பெருமாள் கோயிலிலும், 300 ஆண்டுகளுக்கு பின் காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி, கரியமாணிக்க வரதராஜபெருமாள் கோயிலிலும், 150 ஆண்டுகளுக்கு பின் ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் கங்காதீஸ்வரர் கோயிலிலும், 123 ஆண்டுகளுக்கு பின் திருநெல்வேலி மாவட்டம், அரிகேசவநல்லூர், பெரியநாயகி சமேத அரியநாத சுவாமி கோயிலிலும், 110 ஆண்டுகளுக்கு பின் வேலூர் மாவட்டம், வெட்டுவானம், திரவுபதியம்மன் கோயிலிலும், 100 ஆண்டுகளுக்கு பின் 5 கோயில்களிலும், 90 ஆண்டுகளுக்கு பின் 3 கோயில்களிலும், 70 ஆண்டுகளுக்கு பின் 2 கோயில்களிலும், 50 ஆண்டுகளுக்கு பின் 15 கோயில்களிலும், 40 ஆண்டுகளுக்கு பின் 10 கோயில்களிலும் வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தொன்மையான கோயில்களில் ஒன்றான திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், சீகம்பட்டி கிராமம், பூர்த்திகோவில், திருமுக்தீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் மற்றும் மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் நிறைவுற்று, சுமார் 100 ஆண்டுகளுக்குபின் இந்த கோயிலுக்கு குடமுழுக்கு வருகின்ற ஜூலை 12ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான குடமுழுக்கு பணிகள் மற்றும் யாகசாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியை சேர்ந்த இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு குடமுழுக்கு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Related posts

ஒகேனக்கல்-காவிரி ஆற்றில் 13,000 கனஅடி நீர்வரத்து

விமான சாகசம் – கூட்டத்தில் யாரும் இறக்கவில்லை

பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் பலி!