வெள்ளக்காடாக மாறிய குடியிருப்புகள் ; பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ மழை: சாலைகள் துண்டிப்பு, மண் சரிவு; முகாமில் மக்கள்

பந்தலூர்: பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ பெய்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளக்காடாக மாறி உள்ளது. பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் உள்ள முகாமிற்கும் இடம் பெயர்ந்தனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பந்தலூரில் இடைவிடாது பெய்த கனமழையால் பந்தலூர் பஜார் மற்றும் சுற்றுப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. பந்தலூர் செம்மண்வயல், கூவமூலா, அத்திக்குன்னு கேகேநகர், உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். பொன்னானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோரம் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் ஆறு குடும்பங்களை சேர்ந்த 17 நபர்கள் பொன்னானி அரசு பழங்குடியினர் பள்ளியில் முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டனர்.

மழை வெள்ள சேதம் பாதிப்புகள் குறித்து பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வருவாய்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கனமழைக்கு மண்சரிவு ஏற்பட்டு பந்தலூர் இரும்புபாலம் பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளிகள் பிரமிளா மற்றும் விஜயரத்ணம் ஆகியோர் வீடு முற்றிலும் சேதமானது. அத்திக்குன்னு கேகேநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராம சாலை மழையால் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்றும் மழை நீடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதேபோல், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட தொரப்பள்ளியை அடுத்த இருவவயல் பகுதியில் தாழ்வான பகுதியில் வசிக்கும் சுமார் 10க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. ஒரு சில வீடுகளுக்குள் மழை நீரும் புகுந்துள்ளது.

இப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் வேறு இடம் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 2வது வார்டு முதல் மைல் பகுதியில் இருந்து யானை செத்த கொல்லி பகுதிக்கு செல்லும் சாலையில் பாண்டியாற்றின் கிளை ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள குறுகிய பாலத்தில் தண்ணீர் தேங்கி மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆற்றின் கரையில் உள்ள வீடுகளை ஒட்டியும் மண்ணரிப்பு ஏற்பட்டு வருவதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். கனமழையில் யானை செத்த கொல்லி பகுதியில் வசிக்கும் ஜெமிலா என்பவரது வீட்டின் பின்புறம் மண் சரிவு ஏற்பட்டு சமையலறை சேதமடைந்தது. தட்டக் கொல்லி காலனி பகுதியில் ராஜன் உள்ளிட்ட ஒரு சில வீடுகளின் பின்புறம் லேசான மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

அம்பலமூளா பகுதியில் வட்டக்கொல்லியில் தாழ்வான பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியினை வெள்ளம் சூழ்ந்தது. இங்கு வசித்து வந்த 4 குடும்பங்களின் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய்த்துறையினர் வெள்ளத்தில் சிக்கிய 4 குடும்பங்களை சேர்ந்தவர்களை மீட்டு அம்பலமூளா ஊராட்சி ஒன்றிய பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைத்தனர். நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று வரை கொட்டித்தீர்த்த மழையால் ஒரே நாளில் பந்தலூரில் 27.8 செ.மீ, தேவாலாவில் 19.9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கயிறு கட்டி பாலத்தை கடந்த மக்கள்
கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை பகுதி வழியாக ஓடும் பாண்டி ஆற்றின் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்குள்ள பாலத்திற்கும் மேலாக தண்ணீர் சென்றது. இதன்காரணமாக நேற்று முன்தினம் மாலையில் வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்பிய போது பாலத்தை கடந்து செல்ல முடியாமல் தவித்தனர். இப்பகுதி இளைஞர்கள் இருபுறமும் கயிறு கட்டி பாலத்தின் வழியாக மக்கள் நடந்த செல்ல உதவினர்.

கலெக்டர் நேரில் ஆய்வு
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள சேத பாதிப்புகளை மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, உணவு, பெட்ஷீட், குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

தொடர்ந்து 3 நாள் விடுமுறை
தமிழக, கேரள எல்லையில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் தினமும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களாக விடுமுறை அளித்தது. நேற்றும் பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுகாவில் தொடர்ந்து மழை பெய்ததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Related posts

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்

காவலரின் மண்டையை உடைத்த ஐடி ஊழியர் சிறையில் அடைப்பு

சென்னை அருகே கார்களை கடத்தியவர் கைது 26 வாகனங்கள் பறிமுதல்: போலீஸ் நடவடிக்கை