புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்து மனைவிக்கு அனைத்து வசதிகளுடன் விவாகரத்து கொடுத்து மரணத்தை எதிர்கொண்ட டாக்டர்: ₹3.5 லட்சத்தில் சவப்பெட்டி, விமான டிக்கெட் ஏற்பாடு

திருமலை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அறிந்து மனைவிக்கு விவாகரத்து கொடுத்து மரணத்தை எதிர்கொண்ட டாக்டரின் செயல் தெலங்கானாவில் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கம்மம் நகரை சேர்ந்தவர் ஹர்ஷவர்தன் (34). எம்பிபிஎஸ் படித்து ஆஸ்திரேலியாவில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ம்தேதி கம்மம் நகரில் உறவினர் பெண்ணுடன் திருமணம் நடந்தது. சில நாட்களில் மனைவியை கம்மம் நகரில் விட்டுவிட்டு ஹர்ஷவர்தன் ஆஸ்திரேலியா சென்றார்.

அதே ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஹர்ஷவர்தன் ரத்தவாந்தி எடுத்தார். பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. 2 ஆண்டுகளில் மரணம் அடைந்து விடுவேன் என அப்போதே அவருக்கு தெரிந்து விட்டது. இதுபற்றி தொலைபேசியில் தன்னுடைய பெற்றோர் மற்றும் மனைவிக்கு தெரிவித்து ஆறுதல்படுத்தினார். இந்நிலையில் தனது மரணம் நெருங்குவதை உணர்ந்த ஹர்ஷவர்தனுக்கு, தான் இறந்து விட்டால் மனைவி பாதிக்கப்படுவாரே என்ற கவலை ஏற்பட்டது. இந்நிலையில் எதிர்பாராமல் ஏற்பட்ட சூழ்நிலை பற்றி அவர் மனைவியுடன் பேசி புரிய வைத்தார். பின்னர் இருவரின் சம்மதத்துடன் விவாகரத்து செய்து கொண்டனர். தொடர்ந்து மனைவி வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக இடையூறுகளை சந்திக்காத வகையில் அவருக்கு தேவையான அனைத்தையும் ஹர்ஷவர்தன் செய்துகொடுத்தார்.

தவிர தன்னுடைய உடல்நிலை பற்றி வக்கீல் ஒருவர் மூலம் ஆஸ்திரேலியா நாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்த அவர், ‘நான் இறந்த பின் என்னுடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும்’ என கூறி அதற்குரிய விமான கட்டணம் முழுவதையும் செலுத்தினார். மேலும் தனது உடலை எடுத்து செல்ல பயன்படுத்தக்கூடிய சவப்பெட்டி ஒன்றையும் ₹3.5 லட்சம் செலவு செய்து தயார் செய்தார். அவ்வப்போது குடும்பத்தாருடன் வீடியோ கால் மூலம் பேசி பெற்றோர், உறவினர்கள் ஆகியோரை ஆறுதல்படுத்தி வந்தார். கடந்த மாதம் 24ம்தேதி ஹர்ஷவர்தன் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த நண்பர்களிடம், ‘நான் இன்னும் 2 மணி நேரங்களில் இறந்து விடுவேன்’ என்று கூறினார். ஹர்ஷவர்தன் தெரிவித்தது போலவே அன்றே ஆஸ்திரேலியாவில் மரணமடைந்தார்.

ஏற்கனவே அவர் செய்து வைத்திருந்த ஏற்பாடுகளின் அடிப்படையில் ஹர்ஷவர்த்தன் உடல் அவருக்காக வாங்கி வைத்த சவப்பெட்டியில் விமானம் மூலம் ஐதராபாத்தில் உள்ள பேகம் பேட் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. சொந்த ஊரில் கடந்த 5ம் தேதி இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன. மரணத்தை தைரியமாக எதிர்கொண்ட டாக்டர் ஹர்ஷவர்த்தனின் மரண போராட்டத்தில் தன்னை சார்ந்தவர்கள் பாதிக்க கூடாது என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தனக்கான சவப்பெட்டி, விமான டிக்கெட் உள்ளிட்ட அனைத்தையும் ஏற்கெனவே வாங்கி வைத்த சம்பவம் கேட்கும் ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீர் வரவழைக்கிறது.

Related posts

ஜூலை-05: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு