அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை

புதுடெல்லி: வளர்ச்சி அடைந்த இந்தியாவை எட்டுவதற்கான அடுத்த 5 ஆண்டுகால செயல் திட்டங்கள் மற்றும் புதிய ஆட்சி அமைந்ததும் முதல் 100 நாளில் உடனடியாக செய்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்து பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தை டெல்லியில் நேற்று நடத்தினார். இதில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இதில், வரும் மே மாதம் புதிய அரசு அமைக்கப்பட்ட பின்னர் முதல் 100 நாளில் உடனடியாக செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதோடு 2047ம் ஆண்டுக்கு வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதை பிரதமர் மோடி இலக்காக கொண்டுள்ளார். அதை அடைவதற்கான செயல் திட்டம் குறித்தும், அதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வளர்ச்சி அடைந்த இந்தியாவை அடைவதற்கான செயல்திட்டமானது பல தரப்பினரிடம் விரிவான ஆலோசனை பெற்று தயாரிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக அமைச்சர்களுடன் பிரதமர் மோடி நடத்திய கடைசி ஆலோசனை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!