ஆரம்பத்தில் சைக்கிள் கடை.. தற்போது ரூ.16 கோடி சொத்து: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு!!

சென்னை : அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை 25 பக்கங்களில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. சத்யா மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னையை சேர்ந்த அரவிந்தக்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யநாராயணன் (தி.நகர் சத்யா)சென்னை தி.நகர் தொகுதியில் 2016 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு 2 கோடியே 78 லட்சம் ரூபாய் என்று கூறியிருந்தார். ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சத்யநாராயணன் சொத்து மதிப்பை வெளியிடுமாறு கேட்டபோது அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 13 கோடியே 2 லட்சம் ரூபாய் என்று தகவல் அளிக்கப்பட்டது.எனவே, சொத்து மதிப்பை மறைத்து தேர்தலில் போட்டியிட்டதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘‘அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான புகார் மீது 2 மாதங்களில் ஆரம்பகட்ட விசாரணை முடித்து முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக 16.33% சொத்து சேர்த்த புகாரில், சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை வடபழனியில் உள்ள அவரின் வீடு உட்பட 18 இடங்களில் இன்று காலை 6.30 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.சென்னையில் 16 இடங்களிலும் கோவை, திருவள்ளூரில் தலா ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை 25 பக்கங்களில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில், “2016 தேர்தலில் சத்யா போட்டியிட்ட போது ரூ.3.21 கோடி மதிப்பில் 21 அசையும் அசையா சொத்துக்கள் இருந்தன.2021 தேர்தலில் போட்டியிடும் போது சத்யாவிடம் ரூ.16.44 கோடி மதிப்பில் 38 சொத்துக்கள் அதிகரித்துள்ளது. சத்யா பல்வேறு முறைகளில் ரூ.11 கோடி சேமித்து வைத்துள்ளார்.சத்யாவின் செலவு விவரம் ர்.5.59 கோடியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2.64 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக அவர் மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரது மனைவி, மகள்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அதிமுக நிர்வாகி ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சத்யாவின் நெருங்கிய நண்பரான வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராஜேஷ் வீட்டில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி