அதிமுக பெயரை பயன்படுத்த தடை கோரி பழனிசாமி வழக்கு தொடர முடியாது, கட்சி தான் வழக்கு தொடர முடியும் : ஓபிஎஸ் வாதம்

சென்னை: அதிமுக கட்சி பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை விதித்ததை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்துக்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.இந்த நிலையில், ஓபிஎஸ் வழக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓ பன்னீர் தரப்பு ஆஜரான வழக்கறிஞர், “அதிமுக கொடி சின்னம் பயன்படுத்த விதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.தனது ஆதரவாளர்களாக உள்ள தொண்டர்கள் நீக்கப்படாத நிலையில் எப்படி தடை விதிக்க முடியும்?.எந்த காரணமும் குறிப்பிடாமல் அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதித்த தடை செல்லத்தக்கதல்ல. அதிமுக பெயரை பயன்படுத்த தடை கோரி பழனிசாமி வழக்கு தொடர முடியாது, கட்சி தான் வழக்கு தொடர முடியும். தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமலேயே இடைக்கால தடை விதித்தது தவறு. ,”என வாதிட்டார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அதிமுகவில் உறுப்பினராக இல்லாத போது, எப்படி கொடி, சின்னத்தை பயன்படுத்த முடியும்?.ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஓபிஎஸுக்கு லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் இல்லை. முகம் தெரியாத அவர்களை கருத்தில் கொள்ள முடியாது,”என வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

Related posts

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை

ஒன்றிய அரசின் குற்றவியல் சட்டத்தை எதிர்த்து; திமுக சார்பில் நாளை உண்ணாவிரத போராட்டம்: சட்டத்துறை செயலர் என்.ஆர். இளங்கோ அறிவிப்பு