வீண் பிடிவாதம் பிடிச்சு கட்சியை வீணாக்கிட்டியே என இலை தலைவரை பொளந்து கட்டும் நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தனக்குத்தான் செல்வாக்கு இருக்கிறதாக வீராப்பு காட்டிய சேலத்துக்காரரின் பிடிவாதமே கட்சியின் இந்த நிலைக்கு காரணம் என இலைக்கட்சி நிர்வாகிங்க கடுகடுன்னு இருக்காங்களாமே…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தேர்தல் முடிவால், சேலம்காரர் தனக்குத்தான் தனி செல்வாக்கு உள்ளதாக கருதி காட்டிய வீராப்பு எல்லாம் வீணாகிப் போன கதை ஊரறிந்துபோச்சு.. வாக்குகள் எண்ண துவங்கியதும் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை பெறவேயில்லை..

சில தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுட்டாங்க… 16வது சுற்று வரை நாம் தமிழர் கட்சியை விட பின்தங்கி 4வது இடத்திலேயே அதிமுக இருந்ததே சான்று… இதனால் திக் … திக்…. என்ற பயத்திலேயே இருந்த கட்சியின் நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனராம்.. கடைசியா நடந்த சுற்றுகளில் சில ஆயிரம் ஓட்டுகள் முன்னிலை பெற்று 3வது இடத்திற்கு முன்னேறியதும்தான் அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விட்டாங்களாாம்..

தேர்தல் முடிவுகள் தாங்கள் எதிர்பார்த்ததுதான் என்று கூறி சமாளித்துக் கொண்ட ரத்தத்தின் ரத்தங்களால் தங்கள் கட்சி பல இடங்களில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதையும், கொங்கு கோட்டையில் பெரும் சரிவை சந்தித்ததையும் தாங்கிக் கொள்ள முடியவில்லையாம்.. இதற்கெல்லாம் சேலத்துக்காரரின் வீண் பிடிவாதம்தான் காரணம்னு அவர் மீது நிர்வாகிகளின் கோபம் அதிகரிக்க துவங்கி உள்ளதாம். அவரை பொளந்து கட்டி வசைமாரி பொழிந்து கொண்டிருக்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆனா இன்னொரு விஷயத்துல அவரு ஜாலியா இருக்காராமே.. அது என்ன காரணம்..’’ என அடுத்த கேள்வியைப் போட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர் தேர்தல் ரிசல்ட்டை பார்த்து ரொம்பவே ஷாக்காயிருக்காரு.. மாங்கனி தொகுதியிலாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்துக்கிட்டாரு.. என்றாலும் அவர் நினைத்தது நடக்கல.. அதே நேரத்தில் நாற்பது தொகுதியிலும் தோல்வி அடைந்ததில் வருத்தப்பட்டாலும் இன்னொரு பக்கம் ரொம்பவே ஹேப்பியா இருக்காராம்..

இந்த தேர்தலோடு இலைக்கட்சி முழுமையா தனது கைக்கு வந்திட்டதா நினைக்கிறாராம்.. இலைக்கட்சியை எதிர்த்து தேனிக்காரரும், குக்கர்காரரும் போட்டியிட்டு தோல்வியை தழுவிட்டாங்க.. இனிமேல் இலைக்கட்சியில உரிமை கோரி இந்த பக்கம் அவர்கள் வந்திட முடியாதாம்.. எல்லா பக்கமும் ரெண்டு பேரையும் லாக் பண்ணிட்டாராம்.. இனிமேல் எந்த பிரச்னையும் இல்லாமல் கட்சியை நடத்த முடியும்னு நினைக்கிறாராம்.. இதனால்தான் துன்பமும் அவருக்கு இன்பமா மாறியிருக்காம்…

அதே நேரத்தில் தனித்து போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது போட்டியிடாமல் தப்பி ஓடிய மூத்த நிர்வாகிகள் மத்தியில், தனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தோல்வி அடைவோம்னு தெரிந்தும், களத்தில் இறங்கிய அனைத்து வேட்பாளர்களுக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்து அவர்களை ஆறுதல் படுத்தவும் திட்டம் வச்சிருக்காராம்.. இதனால் தோல்வி அடைந்த வேட்பாளர்கள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மீண்டும் இளம்பெண்ணுடன் மாயமான மன்மதனை ேவலையை விட்டு தூக்க வேண்டும் என ஊரக பகுதி துறை ஊழியர்கள் கொந்தளிக்கிறாங்களாமே..’’ என்னவாம் என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளை கவனிக்கும் துறையின் மாவட்ட அலுவலகத்தில் மதிப்பூதியத்தில் தற்காலிகமாக கம்ப்யூட்டர் ஆபரேட்டராக கவுரவமான குமாரன் என்பவர் பணிபுரிந்து வந்தாரு.. இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் வேலை பார்த்த கலெக்டர் அலுவலகம் இருக்கும் பகுதியை சேர்ந்த பிரியமான பெண்ணை இழுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டாரு..

அப்புறம் சில நாட்கள் கழித்து வந்தவர் அதிகாரிகளை பிடித்து மீண்டும் பணியில் சேர்ந்து கொண்டாரு.. அதேநேரத்தில் காதலித்து இழுத்துக் கொண்டுபோய் கல்யாணமும் செய்து கர்ப்பிணியான நிலையில் அந்த பெண்ணை கைவிட்டுவிட்டாராம்.. இந்த பிரச்னை பெரிதா வெடிக்கவே, துறை அதிகாரிகள் இவரை கடந்த ஆண்டு கண்ணியமான ஒன்றிய அலுவலகத்துக்கு மாற்றிவிட்டார்களாம்.. அங்கு சென்ற ஓரிரு மாதங்களிலேயே அங்கு வேலை செய்த மற்றொரு இளம்பெண்ணுடன் மாயமாகிவிட்டாராம்..

இப்போது வரை அவர் எங்கு இருக்கிறார்னு தெரியவில்லையாம்.. இது தெரிந்த காதல் மனைவி காவல் நிலையம் வரை சென்றும் பலனில்லையாம்.. அதேபோல் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் என்று எங்கு சென்றும் பலனில்லையாம்.. இதனால் இப்பிரச்னை பெரிதாகி ஊரக பகுதிகளை கவனிக்கும் துறையின் பிற அலுவலர்களே அந்த ‘மன்மதன்’ கவுரமான குமாரை வேலையை விட்டே தூக்க வேண்டும்.

பல மாதங்கள் பணிக்கு வராமல் டிமிக்கி கொடுப்பதுடன், நம்பி வந்த பெண்ணை நட்டாற்றில் விட்டதுடன், மற்றொரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடியவனை சும்மா விடக்கூடாதுனு தங்கள் உயர் அதிகாரிகளை நச்சரித்து வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஒரு தொகுதியில் கூட இலைக்கட்சி வெற்றி பெறாததால் டெல்டாவில் மாற்று கட்சிக்கு தாவ நிர்வாகிகள் முடிவு பண்ணிட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘டெல்டா மாவட்டத்தில் மொத்தம் 6 மக்களவை தொகுதிகளில் நெற்களஞ்சிய தொகுதி கூட்டணி கட்சியான கோயம்பேடு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மீதி உள்ள 5 தொகுதிகளில் இலைக்கட்சி போட்டிப்போட்டது. டெல்டா மாவட்டத்தில் மொத்தம் 6 தொகுதிகளிலும் இலைக்கட்சி படுதோல்வியடைந்ததால் மாஜி அமைச்சர்கள் மீது சேலத்துக்காரர் கடும் கோபத்தில் இருக்கிறாராம்… முக்கியமா, டெல்டா மாவட்டத்தில் நிலவி வரும் கோஷ்டி பூசலை எப்படி சமாளிப்பது என்பதுகூட தெரியாமல் அவரே குழப்பத்தில் இருக்கிறாராம்…

அதேநேரத்துல டிடிவி, ஓ.பன்னீர்செல்வமும் எப்படியும் ஜெயிச்சி, அமைச்சராகிடலாம்னு கனவு கண்டாங்களாம். ஆனால் கள நிலவரம் திமுகவுக்கு சாதகமாக இருந்ததாம். ஆனாலும் மனப்பால் குடிச்சவங்களுக்கு, தேர்தல் ரிசல்ட் ரெம்பவே ஷாக் கொடுத்திட்டாம். அமைச்சராவது மட்டுமல்லாமல், அதிமுகவையும் பிடிச்சிடலாம்னு நினைச்சாங்களாம். அண்ணாமலையும் அதற்கு உத்தரவாதம் கொடுத்தாராம். ஆனா இப்போது அண்ணாமலை பதவியே ஆட்டம் காணுது.

இதுல எங்க கட்சியை நம்மகிட்ட வாங்கித் தரப்போறாருன்னு இருவரும் பேசிட்டு இருக்காங்களாம். டெல்டா மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட இலைக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை என தலைமை மீது நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை கடும் அதிருப்தியில் இருக்காங்க..

இதுதவிர கட்சிக்குள்ளே இருந்து வரும் கோஷ்டி பூசலால் மாஜி அமைச்சர்கள் மீது நிர்வாகிகள் உச்சகட்ட கோபத்தில் உள்ளனராம்.. இதனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக மாற்று கட்சிக்கு சென்று விடலாம்னு நிர்வாகிகளுக்குள் பேசி முக்கிய முடிவு எடுக்க இருக்காங்களாம்.. இந்த தகவல் தற்போது தலைமை கவனத்துக்கு சென்றதால் சேலம்காரர் உச்சகட்ட டென்சனுக்கே போயிட்டாராம்…’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

கும்மிடிப்பூண்டியில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

இங்கிலாந்தில் இந்தியா