அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்புக்கு எதிராக ஐகோர்ட் தாமாக விசாரித்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அரசிடம் ஊதியம் பெறுபவர் பொது ஊழியர் என்பதால் ஆளுநரிடம் தான் வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும். அமைச்சர்களை நியமிக்கவும், நீக்கவும் ஆளுநருக்கு தான் அதிகாரம் உள்ளது என்பதால் வழக்கு தொடர அவர் தான் அனுமதி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றார்.

இதையடுத்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஏன் முறையான அனுமதியை ஆளுநரிடம் பெறவில்லை. இன்னும் காலம் தாழ்ந்து விடவில்லை. இப்போதும் ஆளுநரின் அனுமதி பெறலாம். விடுவிப்பை எதிர்த்து ஏன் மேல் முறையீடு செய்யவில்லை. லஞ்ச ஒழிப்புத் துறையின் செயல்பாடின்மை காரணமாகவே தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கில் இருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்த உடனே, லஞ்ச ஒழிப்புத் துறை, உரிய ஆவணங்களுடன் ஆளுநரை அணுகி அனுமதி பெற்றிருக்க வேண்டும். சிறப்பு நீதிமன்றமும் ஆளுநரிடம் முறையாக அனுமதி பெறும்படி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடவில்லை. வழக்கில் ஒரே ஒரு சாட்சி மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளதால், ஆளுநரிடம் அனுமதி பெறலாம் என்று தெரிவித்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Related posts

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்

ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய துணைமுதல்வர் பவன் கல்யாண்