ஆடி மாத அம்மன் கோயில் ஆன்மிக சுற்றுலா பேருந்து தொடக்கம்: 4764 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

தண்டையார்பேட்டை: 4764 கோடி மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என பாரிமுனையில் ஆடி மாத அம்மன் கோயில் ஆன்மிக சுற்றுலா பேருந்து சேவையை துவக்கிவைத்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், ஆடி மாத அம்மன் கோயில் ஆன்மிக சுற்றுலா பேருந்து துவக்கவிழா சென்னை பாரிமுனை தம்புசெட்டி தெருவில் காளிகாம்பாள் கோயிலில் இன்று நடந்தது. விழாவை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் பேசியது: தமிழக முதல்வர் வழிகாட்டுதல்படி இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது அறிவித்தபடி 10 அம்மன் திருக்கோயிலுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல 47 பேர் பதிவு செய்துள்ளனர். 1000 ரூபாய், 800 ரூபாய் என இரண்டாக பிரிக்கப்பட்டு பக்தர்கள் எதை விரும்பி செல்ல நினைக்கிறார்களோ அதை தேர்ந்தெடுத்து செல்லலாம். கடந்தாண்டு வைணவ கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லப்பட்டது. இந்தாண்டு அம்மன் கோயில்களுக்கு அழைத்து செல்லப்படுகிறது.

ஆளவந்தான் அறக்கட்டளை சொத்துக்களை பாதுகாப்பதில் தமிழக அரசு முனைப்புடன் செயல்படுகிறது. 5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 10 கோடியில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. இந்த அரசு அமைந்ததிலிருந்து 865 திருக்கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. 4764 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் 220 பேர் பயிற்சி பெற்று வந்தனர். இந்தாண்டு அதிகப்படியாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சேர்க்கையும் அதிகப்படுத்தப்பட உள்ளது.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 10 திருக்கோயில்கள், தனியார் கட்டுப்பாட்டில் இயங்கும் 30 திருக்கோயில்கள் இரு தரப்பு பிரச்னைகள் காரணமாக மூடப்பட்டு இருந்தது. தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் 11 திருக்கோயில்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 12 ஆண்டுகளாக அறநிலையத்துறையில் பதவி உயர்வு இல்லாமல் இருந்த நிலையை மாற்றி தற்போது 140 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மக்கள் தெய்வ வழிபாட்டை தொன்று தொட்டுப்போற்றி வருவதோடு, ஒரே நாளில் பல்வேறு திருக்கோயில்களுக்கு சென்று வழிபடுவதை பெருவிருப்பமாக கொண்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு 2022-2023ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் ‘தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கும், வைணவ கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிக பயணம் செல்ல சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும்’ என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், கடந்தாண்டு ஆடி மாதம் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கும் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இந்தாண்டு ஆடி மாத அம்மன் திருக்கோயில்களுக்கு குறைந்த கட்டணத்தில் ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்லும் வகையில் அறிவிப்பு செய்யப்பட்டு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் முன்பதிவுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பயணத்தின் முதல் திட்டத்தில் பாரிமுனை காளிகாம்பாள் கோயில், ராயபுரம் அங்காளபரமேஸ்வரி கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில், பெரியபாளையம் பவானியம்மன் கோயில், புட்லூர் அங்காள பரமேஸ்வரி கோயில், திருமுல்லைவாயல் திருவுடையம்மன், பச்சையம்மன், கொரட்டூர் செய்யாத்தம்மன், வில்லிவாக்கம் பாலியம்மன் ஆகிய திருக்கோயில்களுக்கு ரூ.1,000 கட்டணத்திலும், 2வது திட்டத்தில் சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள், முண்டககண்ணியம்மன், கோலவிழியம்மன், தி.நகர் ஆலயம்மன் கோயில், முப்பாத்தம்மன், சைதாப்பேட்டை பிடாரி இளங்காளியம்மன் கோயில், பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி, மாங்காடு காமாட்சியம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், கீழ்ப்பாக்கம் பாதாள பொன்னியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு ரூ.800 கட்டணத்திலும் பக்தர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.

இந்த 2 திட்டங்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு, பிரசாதம், கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடுடன் மதிய உணவும் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியில், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலர் க.மணிவாசன், ஆணையர் க.வீ. முரளிதரன், சுற்றுலாத்துறை இயக்குனரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி, இணை ஆணையர்கள் லட்சுமணன், ரேணுகா தேவி, முல்லை, உதவி ஆணையர் பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள், திமுகவினர் கலந்துகொண்டனர்.

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் வரும் 6ம் தேதி பிரமாண்ட வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

தசரா விழாவை ஒட்டி இன்று முதல் 16ஆம் தேதி வரை சென்னை மற்றும் கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி!