ஆதிச்சநல்லூர் அகழாய்வு மையத்தை பார்வையிட கண்ணாடி அரங்கு அமைக்கும் பணி தீவிரம்: தமிழரின் தொன்மை நாகரீகம் உலகளவில் பரவ வாய்ப்பு

நெல்லை: நெல்லை அருகேயுள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு மையத்தை பார்வையிட கண்ணாடி அரங்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. உலகின் தொன்மை வாய்ந்த பூமியாக தமிழகம் கருதப்படுவதற்கான சான்றுகள் தோண்ட தோண்ட வெளிப்பட்டு வருகிறது. ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொன்மை மனிதர்களின் வாழ்வு முறை அடையாளங்கள் வெளிப்பட்டன. இதன் வரலாறு நீண்ட நெடியதாக உள்ளது. இந்த மையத்தின் முதல் வரலாறு 1876ல் தொடங்கியது. அந்தப்பகுதியில் அப்போது ரயில்பாதை அமைப்பதற்காக சரள் கற்களை தோண்டி எடுத்தபோது ஏற்பட்ட குழிகளில் பானை ஓடுகளும், பிற பொருட்களும் வெளிப்பட்டது.

இதுபோல் 19ம் நூற்றாண்டின் இறுதியில் இந்திய தொல்லியல் துறையைச் சேர்ந்த அலெக்சாண்டரியா என்பவர் சிறிய அளவில் குழிகளை தோண்டி ஆய்வு செய்தார். இங்கு கடந்த 2004-2005ம் ஆண்டில் சென்னை ெதால்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்த சத்தியமூர்த்தி குழுவினர் முதற்கட்ட ஆய்வை தொடங்கினர். 600 சதுர மீட்டர் பரப்பளவிற்கு நடத்தப்பட்ட ஆய்வில் 178 முதுமக்கள் தாழிகள் தோண்டி எடுக்கப்பட்டன. பல பானைகளில் மடக்கி வைக்கப்பட்ட நிலையில புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புகூடுகள் கிடைத்தன.

தொடர்ந்து மேலும் 3 இடங்களில் இப்பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு தீவிரம் காட்டியுள்ளது. மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு மையத்தை பொதுமக்கள் பார்வையிட தேவையான கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு தற்போது தோண்டப்பட்டுள்ள இடத்தில் கிடைத்த மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அந்த இடத்தில் உள்ள நிலையிலேயே பார்வையிடுவதற்கு வசதியான கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்பகுதியில் உள்ள இயற்கை நிலையை சேதமின்றி காக்கவும் தெளிவாக பார்க்கவும் அதன் மேல்பகுதியில் பிரமாண்ட கண்ணாடி பதிக்கப்படுகிறது.

அந்தப்பகுதியைச் சுற்றி நின்று பார்வையிட தனிமேடை வசதி செய்யப்படுகிறது. மேலும் மழை, வெயில், காற்று போன்றவையின் பாதிப்பின்றி இருக்க மேல் பகுதியில் கூரையும் அமைக்கப்படுகிறது. இதனால் இந்த இடம் தொன்மையை விளக்கும் அருங்காட்சியகமாக மாறுகிறது. திருச்செந்தூர் செல்பவர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் இப்பகுதியை பார்வையிட வரும்போது தமிழரின் தொன்மை நாகரீகம் மேலும் உலகளவில் பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கண்ணாடி பார்வை அறையை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் திறந்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Related posts

அண்ணா பல்கலைக்கு குண்டு மிரட்டல்

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்