ஆதி திராவிடர், பழங்குடியினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

சென்னை: சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம், என்று கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கு 22 விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

இதில் 2 ஆதிதிராவிடர் பள்ளி மாணவ, மாணவியர் விடுதிகள், 7 கல்லூரி மாணவர் விடுதிகள், 3 கல்லூரி மாணவியர் விடுதிகள், ஒரு முதுகலை மாணவர் விடுதி, 3 முதுகலை மாணவியர் விடுதிகள், ஒரு ஆராய்ச்சி மாணவர் விடுதி, ஒரு ஆராய்ச்சி மாணவியர் விடுதி, 2 தொழிற்பயிற்சி மாணவர் விடுதி, ஒரு தொழிற்பயிற்சி மாணவியர் விடுதி, மற்றும் ஒரு பழங்குடியினர் நல மாணவியர் விடுதி செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதியில் பட்ட படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதிகளும் அளிக்கப்படும். 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகளும், 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகளும் வழங்கப்படும். மாணாக்கர்கள் சம்மந்தப்பட்ட ஆதிதிராவிடர் நல விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் விண்ணப்பப்படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

பள்ளிக்கும் வீட்டிற்குமான தொலைவு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவியர்களுக்கும் பெற்றோரை இழந்த மாணவர்கள் மற்றும் தாய் தந்தை வெளியூர்களில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் இருக்கும் மாணவர்களுக்கும் மேற்படி நிபந்தனை பொருந்தாது.
கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள விடுதிகளில் மட்டுமே மாணாக்கர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கட்டாயமாக ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் தற்போது பயன்பாட்டில் இருக்க வேண்டும்.

இணைய வழியில் பெறப்பட்ட வருமானச் சான்றிதழ் (கடந்த ஓராண்டுக்குள்). இணைய வழியில் பெறப்பட்ட சாதிச் சான்றிதழ். மாணாக்கர்களின் இ.எம்.ஐ.எஸ்/யு.எம்.ஐ.எஸ் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு எண் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட காப்பாளர், காப்பாளிகளிடமிருந்து பெற்று வருகிற 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். எனவே சென்னை மாவட்டத்தில் கல்வி பயின்று வரும் மாணவர் மாணவியர்கள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை