ஆனந்தம் தரும் ஆடி மாதம்!

ஆடி மாதத்தில் வரும் முக்கிய விரத தினங்கள் அனைத்தையும் தவறாது கடைபிடிப்பது பெண்களின் வழக்கம். ஆடி மாதம் என்றாலே அம்மன் மாதம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு தமிழகம் முழுவதும் அம்மன் ஆலயங்களில் அந்த மாதம் முழுவதும் திருவிழா கோலாகலமாக காணப்படும்.ஆடி மாதம் அம்பிகை பிறந்த மாதம் என்றும், அம்பிகை தனது அருள் ஒளியை முழுமையாக பரிபூரணமாக தரும் மாதம் என்பது ஐதீகம். அதனால்தான் ஆடி மாதத்தில் ஒவ்வொரு நாளும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆடி மாதத்தில் ஆலய வழிபாட்டில் ஆண்களை விட பெண்கள்தான் தங்களை அதிகம் ஈடுபடுத்திக் கொள்வார்கள். இம்மாதத்தில் வரும் முக்கிய விரத தினங்கள் அனைத்தையும் தவறாது கடைபிடித்து தங்கள் குடும்ப மேன்மைக்காக அம்பிகையிடம் வணங்குவது வழக்கம். எனவேதான் அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் பெண்கள் அதிக அளவில் ஆலயம் வருவதை காண முடியும்.ஆடியில் வரும் ஒவ்வொரு விழாவும் பெண்களை சுற்றியே அமைந்திருக்கும். ஆதி காலத்தில் இருந்து இன்று வரை ஆடி மாத விழாக்கள் பெண்களின் வாழ்க்கையுடன் இரண்டற கலந்துள்ளது.

சக்தி வழிபாடு, மிக மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை ‘தாய்மை வழிபாடு” என்று குறிப்பிட்டார்கள். உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது. சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு “ஹ்ரீம்” எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார். ‘ஹ்ரீம்’, ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது.

‘ஹ்ரீம்’ என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி, மனதை அலைபாய விடாமல், ஒருமுகப்படுத்தி படித்தால், முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார். அம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. “முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே” என்கிறார் அபிராமிபட்டார்.

கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே. சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது. எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும். வீட்டில் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி ஆகிய மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம்.

குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்பிகையை பூஜிக்க ஏற்ற தினங்களாகும். அதிலும் முறைப்படி, பக்தியுடன் அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களை பெறலாம். லோக மாதாவான பராசக்திக்கு நாம் எல்லோருமே பிள்ளைகள்தான். நம் மீது கருணை, அன்பு காட்டி, நம்மையெல்லாம் பக்குவப்படுத்தி அவள் வளர்த்துள்ளாள். அன்னையை வணங்கி நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும். அவள் அருளைப் பெற்றவர்களுக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும், இடையூறும் வராது. இப்படி கடவுளாகவும், குருவாகவும் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவள் நமக்கு என்றென்றும் வழிகாட்டியாக இருப்பாள். அத்தகைய தெய்வத்துக்கு நாம் நன்றியை செலுத்துவது தான் ஆடி மாதம்.

உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் அவள் காலடியில் ஒப்படைக்க வேண்டும். அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான கூழ் படைத்து வழிபடுதல் மிகவும் நல்லது. அதில்தான் அன்னை பராசக்தி மகிழ்ச்சி அடைவாள். அதன் மூலம் நம் வாழ்க்கை உயரும். அண்டங்கள் அனைத்தையும் அதிர வைக்கும் ஆற்றலை அன்னை பெற்றிருந்தாலும், தூய்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களிடம் அன்பையும் அரவணைப்பையும் காட்டுவாள். அதை பெற நாம் இந்த ஆடி மாதத்தில் சக்தி தலங்களுக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி வழிபட வேண்டும். பெரும்பாலான கோயில்களில் ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் வார்த்து படைத்து பிறகு அதை பக்தர்களுக்கு தானமாக விநியோகம் செய்வார்கள்.

இந்த சடங்குக்கு பின்னால் ஒரு வரலாறு உள்ளது.கேட்டதை எல்லாம் கொடுக்கும் காமதேனு பசுவை ஜமத்கனி முனிவர் வளர்த்து வந்தார். அவரிடமிருந்து அதை அபகரிக்க கார்த்தவீர்யாஜுனர் மகன்கள் திட்டமிட்டனர். அவர்கள் ஜமத்கனி முனிவரிடம் சென்று காமதேனு பசுவை தங்களிடம் கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் ஜமத்கனி முனிவரை கொன்று விட்டு காமதேனு பசுவை கார்த்தவீர்யாஜுனர் மகன்கள் கடத்தி சென்றனர். ஜமத்கனி முனிவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது மனைவி ரேணுகாதேவி உடன்கட்டை ஏறினார். அம்பிகையின் மறு உருவமான ரேணுகாதேவி தீயின் நடுவில் குதித்ததை கண்ட வருண பகவான் மழை பொழிந்து ரேணுகாதேவியை காப்பாற்றினார். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் ரேணுகாதேவி உயிர் தப்பினார்.

உடலில் ஏற்பட்ட தீ கொப்புளங்களை மறைக்க உடல் முழுவதும் வேப்ப இலையை சுற்றிக் கொண்டார். இந்த நிலையில் ஒரு ஊருக்குள் சென்ற அவர் பசியை போக்க உணவு கேட்டார். அந்த கிராமத்து மக்கள் ரேணுகாதேவிக்கு பச்சரிசி, வெல்லம், காய்கறி, இளநீர் கொடுத்தனர். அதை வைத்து ரேணுகாதேவி கூழ் காய்ச்சி குடித்து பசி ஆறினார்.இந்த வரலாற்று நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில்தான் தற்போது அம்மன் ஆலயங்களில் கூழ்வார்த்தல் நடத்தப்படுகிறது.

ஆடி காற்றில் தூசு பறக்கும் என்பதால் இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். இதை தவிர்க்கவே மாரியம்மன் கோயில்களில் கஞ்சி வைப்பார்கள். அம்பிகைக்கு முருங்கை கீரை, தண்டு கீரை மிகவும் பிடிக்கும் என்பதால், அம்மன் படையலில் இந்த 2 கீரைகளும் தவறாமல் இடம் பெறும். ஆடி மாதம் அம்மனை தரிசித்து நற்பலன் அடைவோம்.

தொகுப்பு: பிரியா மோகன்

Related posts

திருச்செந்தூரின் கடலோரத்தில்…

வெற்றி தரும் வெற்றி விநாயகர்

இந்த வார விசேஷங்கள்