ஆதிதிராவிடர் நல திட்டங்களுக்கு கையகப்படுத்தும் நிலங்களை திரும்ப ஒப்படைக்கும் பரிந்துரையில் உரிமையாளர்-அதிகாரிகள் கூட்டுசதி: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் செல்ல பாண்டியன் உட்பட 5 பேர் தாக்கல் செய்த மனுவில், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் வீடு கட்டும் திட்டத்திற்கு தங்களது நிலத்தை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தியது. பல ஆண்டுகளாகியும் அந்த இடத்தில் வீடு கட்டப்படவில்லை. தற்போது அந்த நிலத்தில் வீடு கட்ட தேவை இல்லை எனக் கூறி சிறப்பு தாசில்தார் உத்தரவிட்டுள்ளார். எனவே, அந்த நிலத்தை எங்களிடம் திரும்ப ஒப்படைக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நில உரிமையாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்மந்தப்பட்ட நிலம் அரசுக்கு தேவை இல்லை என்று முடிவெடுத்ததால் அந்த நிலத்தை எங்களுக்கு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, இது போன்று ஆதி திராவிடர் நல திட்டங்களுக்கு நிலம் எடுத்ததில் 90 சதவீத வழக்குகள் மீண்டும் நிலத்தை ஒப்படைக்க கோரி உயர் நீதிமன்றத்தில் தொடரப்படுகிறது. வீடு இல்லாத ஆதிதிராவிடர்களுக்கு வீடு கட்டுவதற்காகவே திட்டம் வகுக்கப்பட்டு அதனை குறிப்பிட்ட காலத்தில் செயல்படுத்தப்படாமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டு விடுகின்றனர். பல ஆண்டுகளுக்கு பிறகு நில உரிமையாளருடன் கூட்டு சேர்ந்து அதிகாரிகள் வீடு கட்ட தேவை இல்லை எனக் கூறி அந்த நிலத்தை திரும்ப ஒப்படைக்க அரசுக்கு பரிந்துரை செய்கின்றனர்.

இந்த விஷயத்தில் நில உரிமையாளர்களும் அரசு அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபடுகின்றனர். அரசின் வேறு எந்த திட்டத்திலும் இப்படி பரிந்துரைப்பது கிடையாது. அதிகாரிகள், நில உரிமையாளர்களுக்கு இடையிலான கூட்டு சதி தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்து விசாரணையை ஜனவரி 30க்கு தள்ளி வைத்தார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!