வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை முதல் ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம்

திருமலை: வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் நடைபெற உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 23ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் எனப்படும் வைகுண்ட வாயில் திறக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 10 நாட்கள் பக்தர்கள் பரமபத வாசல் வழியாக சென்று ஏழுமலையானை தரிசிக்க உள்ளனர்.வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு அத்யாயன உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா 20 நாட்கள் நடத்தப்படுவதை போல் இந்த உற்சவம் திருப்பதி கோயிலில் 25 நாட்கள் நடத்தப்படுகிறது. இந்த 25 நாட்களில் வைணவர்கள் ஒன்றுகூடி, 12 ஆழ்வார்கள் அருளிய நான்காயிரம் திவ்ய பிரபந்த பாசுரங்களை தினமும் பாராயணம் செய்ய உள்ளனர்.

ரங்கத்தைபோல் இங்கும் முதல் 11 நாட்கள் பகல் பத்து உற்சவமும், அடுத்த 10 நாட்கள் ராபத்து உற்சவமும் நடத்தப்படுகிறது. நாலாயிரம் திவ்யபிரபந்த பாசுரங்கள் பாராயணம் செய்யும் இந்த 25 நாள் விழாவிற்கு தான் அத்யாயன உற்சவம் என்று பெயர். 24வது நாள் வராஹ சுவாமி சாத்துமுறை நடத்தப்பட்டு, 25வது நாளில் உற்சவம் நிறைவடையும். இந்த அத்யாயன உற்சவம் நாளை தொடங்க உள்ளது. இதனையொட்டி ரங்கநாதர் மண்டபத்தில் பெரிய சேஷ வாகனத்தில் தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமியும், கிழக்கு திசையை நோக்கி ராமானுஜரும் கொலு வைக்கப்பட்டு ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு திருப்பாவை பாசுரம் பாடப்பட உள்ளது. வரும் ஜனவரி 5ம் தேதி வரை தொடர்ந்து ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் நடத்தப்பட உள்ளது.

Related posts

இன்றைய நாள் எனக்கானது: ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா பேட்டி

விம்பிள்டன் டென்னிஸ் நவரோ கால்இறுதிக்கு தகுதி: கோகோ காப் அதிர்ச்சி தோல்வி

கைதுக்கு எதிரான ஜாபர் சாதிக் வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு