விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகன நிறுத்தம் விரைவில் திறக்கப்படும்: நிர்வாகம் தகவல்

சென்னை: விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகன நிறுத்தும் இடம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும், மக்களுக்குப் போக்குவரத்தை எளிமைப்படுத்தவும் மெட்ரோ ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மெட்ரோ ரயில்களில் பயணிக்காமல் பார்க்கிங் வசதிக்காக மட்டுமே மெட்ரோ பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்துவது அதிகமாக இருப்பதால், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களுக்குப் போதுமான பார்க்கிங் வசதிகள் இல்லாமல் போய்விடுகின்றன.

இதனால் மெட்ரோ ரயில்களில் பயணிக்காமல் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது மெட்ரோ ரயில் நிர்வாகம். குறிப்பாக சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு 475 வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. ஆனால் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதியிலிருந்து வரும் பயணிகளின் வாகனங்களை நிறுத்தவதற்கான போதுமாக இடவசதியாக இல்லை.

மேலும் பல்லாவரம், பம்மல், குரோம்பேட்டை, முடிச்சூர், சிட்லபாக்கம் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பயணிகள் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக விமான நிலைய மெட்ரோ நிலையத்தை பயன்படுத்தி, வடசென்னை, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர். பெரும்பாலானோர் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனம் மற்றும் கார்களை பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

மேலும் தெற்கு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலைய மெட்ரோ நிலையத்தை பயன்படுத்துவதால் மீனம்பாக்கம் அல்லது நங்கநல்லூர் மெட்ரோ நிலையங்களின் வாகனங்களை நிறுத்துகின்றனர். இந்த இரண்டு நிலையங்களிலும் தேவையை பூர்த்தி செய்ய போதுமான இடவசதி இல்லாததால் பெரும்பாலும் வாகனங்கள் நிரம்பியுள்ளன. இதனை கருத்தில் கொண்டு பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் வளாகத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பெரிய வாகன நிறுத்துமிடத்தை தயார் செய்யப்பட்டு வருகிறது என மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மெட்ரோ அதிகாரிகள் கூறியதாவது: சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பல்லாவரம் பகுதியில் சுமார் 3 ஏக்கரில் ஒரு பெரிய நிலத்தை மெட்ரோ நிர்வாகம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் சுமார் 100 கார்கள் மற்றும் 1500 இருசக்கர வாகனங்கள் நிறுத்துப்படும். மேலும் இந்த பார்க்கிங் பகுதியிலிருந்து விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் வரை செல்ல 5 முதல் 10 நிமிடங்களுக்கு இணைப்பு வாகன சேவை இயக்கப்படும்.

ஏனென்றால் விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் எந்த ஒரு நிலம் இல்லாததால் இந்த மாற்று ஏற்பாட்டை செயல்படுத்த வேண்டியுள்ளது. இந்த இடம் அடுத்த மாதம் இறுதிக்குள் வாகனங்களை நிறுத்த தயாராகிவிடும். அதே நேரத்தில் இணைப்பு வாகன சேவை தொடங்கும் வகையில் திட்டமிட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related posts

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

செப் 18: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை