கூடுதல் நிதி தேவை

சென்னை உள்பட 4 மாவட்டங்கள், நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்கள் என தமிழகத்தில் 8 மாவட்டங்கள் மிக கனமழையால் பெரும் பாதிப்புகளை சந்தித்தன. பல லட்சம் வீடுகள், பல்லாயிரம் ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. வெள்ள பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.7,033 கோடியும், நீண்ட கால நிவாரணமாக ரூ.12,659 கோடியும் வழங்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். சென்னை வெள்ள பாதிப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்த சூழலில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. மொத்தம் 8 மாவட்டங்களில் சேதத்தை கணக்கில் கொண்டு, இதனை தேசிய பேரிடராக அறிவித்து, ஒன்றிய அரசு நிதி ஒதுக்க வேண்டுமென தமிழக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வெள்ளம் பாதித்த மாவட்டங்களை ஒன்றிய குழுவும் பார்வையிட்டது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது.

கூடுதலாக நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். இதுபோன்ற சேதங்களை பிரதமர் வந்து கட்டாயம் பார்வையிட்டிருக்க வேண்டும். வெள்ளத்தால் மக்கள் பாதிப்படைந்துள்ள சூழலில், ஒன்றிய அரசின் பாரபட்ச பேச்சு, நடவடிக்கை மாநிலம் முழுவதும் பெரும் அதிருப்தியை தந்தது. இதனையடுத்தே நேற்று முன்தினம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தூத்துக்குடியில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மழை வெள்ள பாதிப்புகள், நிவாரணம் தொடர்பான 72 பக்க கோரிக்கை மனுவை மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். பாதித்த பகுதிகளை பார்வையிட்ட பின், தென்மாவட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வாய்ப்பில்லை. அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. வங்கிகள் மூலம் கடன் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென கூறிவிட்டு சென்றுள்ளார். இங்கே ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். சென்னையில் 2015ம் ஆண்டு பெருவெள்ளம் ஏற்பட்டபோது தமிழக அரசு, மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ.25,912 கோடி நிவாரணம் கோரியிருந்தது. ஒன்றிய அரசு வழங்கியது ரூ.1,738 கோடி. வர்தா புயல் தாக்கியபோதும், தமிழக அரசு கேட்டது ரூ.22,573 கோடி.

கிடைத்தது ரூ.266 கோடி. 2017ல் ஓகி புயல் குமரி மாவட்டத்தை தாக்கியபோது, தமிழக அரசு கேட்டது ரூ.9,302 கோடி. கிடைத்தது ரூ.133 கோடி. 2018ல் கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்காக கேட்ட நிவாரணம் ரூ.14,910 கோடி. கிடைத்தது ரூ.1,146 கோடி ரூபாய் மட்டுமே. அதாவது, 7.69 சதவீதம். கடந்த 8 ஆண்டுகளில் தமிழக அரசு சார்பில் கோரப்பட்ட பேரிடர் நிவாரணம் ரூ.1.16 லட்சம் கோடி. ஒன்றிய அரசு வழங்கியது வெறும் ரூ.5,094 கோடி. இதிலிருந்தே புரிகிறதா? இந்தியாவின் ஒரு மாநிலத்தின் தேவைதனை உணர்ந்து நிதி ஒதுக்காமல், தமிழகத்தை புறக்கணிக்கும் நோக்குடன் ஒன்றிய அரசு செயல்படுகிறது என்று? புயலின் கடும் சீற்றம், பெருமழை, வெள்ளம் என இயல்பு வாழ்க்கையே ஸ்தம்பித்த நிலையில் தமிழகம் தவிக்கும்போது, இதனை தேசிய பேரிடராக அறிவிக்காமல் எதனை ஒன்றிய அரசு தேசிய பேரிடராக அறிவிக்கப் போகிறது? இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் பாதிப்பு ஏற்ற வகையில் தமிழக அரசு கோரியுள்ள நிவாரணத்தொகையை ஒன்றிய அரசு கட்டாயம் வழங்க வேண்டும்.

Related posts

எதிர்கட்சி தலைவராக பதவியேற்று 100வது நாள்: ராகுல் வெற்றிகளை குவிக்க வேண்டும்.! செல்வப்பெருந்தகை வாழ்த்து

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு