ஆடிப்பெருக்கில் ருசிக்கப்படும் உணவுப் பதார்த்தங்கள்!

தமிழ் மாதங்களில் 2 மாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஒன்று தை. மற்றொன்று ஆடி. தை மாதத்தில் தமிழர்களின் அடையாள விழாவான பொங்கல் வரும். ஆடி மாதத்தில் தங்களின் வாழ்வாதாரத்திற்கு வளம் சேர்க்கும் நதிகளுக்காக நடத்தப்படும் ஆடிப்பெருக்கு வரும். இன்னும் சில நாட்களில் ஆடிப்பெருக்கு விழா வருகிறது. தமிழர்களின் ஒவ்வொரு விழாவிலும் உணவுக்கு ஒரு முக்கியப் பங்கு இருக்கும். அதேபோல ஆடிப்பெருக்கு விழாவிலும் சில உணவுப்பொருட்கள் முக்கியமாக இடம்பிடிக்கின்றன. தமிழகத்தில் ஓடும் பல முக்கிய நதிகளில் ஆடி மாதம்தான் நீர் பெருகி ஓடும். இதைக் கொண்டாடத்தான் ஆடிப்பெருக்கு விழா கடைபிடிக்கப்படுகிறது. சித்திரையில் உச்சத்தில் இருக்கும் வெயில் மெல்ல மெல்ல குறைந்து ஆடியில் தனது உக்கிரத்தைக் குறைத்துக் கொள்ளும். அப்படியே சூழல் வேறு வடிவில் இருக்கும். ஆடி மாதத்தில்தான் சூரியன் வடக்கு அரைக்கோளத்தில் இருந்து தெற்கு திசை நோக்கி செல்ல ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் மழைப்பொழிவு நிச்சயம் இருக்கும். கோடையில் வறண்டு கிடந்த பூமி இந்த மழைப்பொழிவினால் ஈரமாகும்.

பல ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். சரியாக ஆடி மாதம் 18ம் தேதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு இருக்கும். இதை வரவேற்கும் விதமாகத்தான் பொதுவாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. ஆறுகளில் தண்ணீர் நிறைந்திருப்பதாலும், ஆங்காங்கு விளைநிலங்கள் ஈரமாக இருப்பதாலும், விவசாய வேலைகளை துரிதமாக ஆரம்பிப்பார்கள். உழவு செய்தல், விதைத்தல் போன்ற பணிகளுக்கு இந்த மாதம் தோதாக இருக்கும். இந்த சமயத்தில் பயிர்களைச் சாகுபடி செய்தால்தான் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். இதனால் விவசாயத்திற்கு இந்த மாதம் சாதகமான மாதமாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆடி மாதத்தில் இருந்து விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி என தொடர்ச்சியாக பண்டிகைகள் வர ஆரம்பிக்கும். இதனால் ஆடி மாதத்தை பண்டிகைகளின் தொடக்க மாதமாகவும் கருதுகிறார்கள். இதனால் ஆடிப்பெருக்கு இன்னும் விசேஷமாக பார்க்கப்படுகிறது. அந்த நாளில் காலையில் அரிசி, வெல்லத்தைக் கலந்து கடவுளுக்கும், முன்னோர்களுக்கும் படைத்து பூஜை செய்கிறார்கள். சில பகுதிகளில் அன்றைய தினம் சிறுவர்கள் சிறிய அளவிலான தேர் செய்து தெருக்களில் வலம் வருவார்கள். ஆடி மாதத்தில் காற்று நன்றாக வீசும் என்பதால் பட்டம் விட்டும் மகிழ்ச்சி அடைவார்கள்.

மாலையில் ஆறு, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்துடன் சென்று தாங்கள் கொண்டு வந்த உணவுப் பதார்த்தங்களை உண்டு மகிழ்வார்கள்.இந்த நாளில் தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், அவியல், மோர்க்குழம்பு, அப்பளம், வடை மற்றும் சக்கரைப் பொங்கல் என பல விதமான உணவுகளைச் செய்து இயற்கை அன்னைக்கு பூஜை செய்து, உண்டு மகிழ்வார்கள். மேலும் கல்கண்டு சாதம், கல்கண்டு பொங்கல், சாம்பார் சாதம், சம்பா சாதம், பயத்தம்பருப்பு பாயசம், தேங்காய்ப்பால் பாயசம், சுண்டல் உள்ளிட்டவற்றையும் ஆடிவிருந்தில் இடம் பிடிக்கும். ஆடிப்பெருக்கு நாளில் சில இடங்களில் மிளகு வடையுடன் 5 விதமான அரிசி சாதத்தைத் தயாரித்து மதிய உணவை எடுத்துக் கொள்வார்கள். பல வீடுகளில் வடை, பாயசத்துடன் சாம்பார், ரசம் என ஃபுல் மீல்ஸ் ருசிக்கப்படுகிறது. சிலர் இதை சைவ விருந்தாகப் பார்க்கிறார்கள். சிலர் அசைவ விருந்தாக பார்க்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் ஆடிப்பெருக்கு வயிற்றுக்கு வகை வகையாய் ஈயப்படும் சிறப்பு விழாவாகத்தான் இருக்கிறது.

பயணிகள் கவனத்திற்கு…

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் என்றால் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். வெள்ளையர்கள் காலத்தில் போக்குவரத்திற்காக மட்டும் இல்லாமல் வணிகத்திற்கு பெரும் உதவியாக இருந்தது சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன். இத்தகைய சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் தற்போது புதுமையான வடிவில் ஒரு உணவகம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. புதிதாக சென்னைக்கு வருபவர்கள் என்னடா ரயில் ப்ளாட்பார்மில் இல்லாமல் வெளியில் நின்றுகொண்டு இருக்கிறது என்று நினைக்கும் அளவிற்கு இந்த உணவகம் அச்சு அசலாக ரயில் போலவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. முழுக்க முழுக்க ரயில் பெட்டி மாடலில் வடிமைக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில் பலரும் விரும்பி உணவு வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள்.

கிட்டதட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு இந்த உணவகம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் ரூப் டாப் டைனிங்கும் இருக்கிறது. குடும்பமாகவும், நண்பர்களுடனும் வருபவர்கள் முதல் தளத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே சாப்பிடலாம். விலையும் மிடில் கிளாஸ் உணவகங்களில் இருக்கும் விலையாகத்தான் இருக்கிறது. ஒரு டிஃப்ரண்டான டைனிங் எக்ஸ்பீரியன்சை விரும்புகிறவர்கள், பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும் இந்த உணவகத்தைத் தேர்வு செய்யலாம். இந்த ஸ்பெஷல் ரெஸ்டாரன்டில் ஏசி கோச்சும் இருக்கிறது மக்களே!

ஆ.வின்சென்ட் பால்

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்