மதுபோதையில் வாலிபர்கள் ரகளை போலீஸ்காரர் மீது தாக்குதல்: 8 பேர் கைது

பழநி: பழநியில் உள்ள ஓட்டலில் மதுபோதையில் கூச்சலிட்ட வாலிபர்களை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை தாக்கிய 8 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே உள்ள பாலசமுத்திரத்தை சேர்ந்தவர் துரைராஜ் (33). இவர், கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று நள்ளிரவு பழநி ரயில்வே பீடர் சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவரது டேபிள் அருகே, மற்றொரு டேபிளில் அமர்ந்திருந்த சில வாலிபர்கள், மதுபோதையில் ரகளை செய்து கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்த ஓட்டல் ஊழியர்கள், அக்கம்பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் முகம்சுளித்தனர். இதையடுத்து போலீஸ்காரர் துரைராஜ், வாலிபர்களை பார்த்து அமைதியாக இருக்கும்படி கூறி கண்டித்தார். இதனால், ஆத்திரமடைந்த வாலிபர்கள் ஒன்று சேர்ந்து அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில், காயமடைந்த துரைராஜ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பழநி டவுன் காவல்நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழநி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் (23), பிச்சை (21), பிரபு (23), மதன்ராஜ் (21), ராமச்சந்திரன் (23), கட்டளை மாரிமுத்து (24), குணா (22), அரவிந்தன் (24) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சமூக சீர்திருத்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்க தனித்துறையை அமைக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு முத்தரசன் கோரிக்கை

நட்பு வட்டமும் நல்லோர் வட்டமும்

பட்டு வாரியத்தில் சயின்டிஸ்ட்