அதானியின் பங்குச்சந்தை முறைகேடு கோடக் வங்கியின் பெயரை செபி மறைத்தது ஏன்? ஹிண்டன்பர்க் கேள்வி

மும்பை: அதானியின் பங்குச்சந்தை முறைகேட்டில் தொடர்புடைய கோடக் மகிந்திரா வங்கியின் பெயரை மறைத்து அறிக்கை சமர்ப்பித்தது ஏன் என, செபிக்கு ஹிண்டன் பர்க் கேள்வி எழுப்பியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், 2023ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி அதானி குழுமம் தொடர்பான விரிவான ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், பங்கு விலையை செயற்கையாக ஏற்றுவது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச் சாட்டியிருந்தது. இதனால் அதானி நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தன.

இந்த வீழ்ச்சியால் ஹிண்டன் பர்க் நிறுவனமும் பல லட்சம் டாலர் வருமானம் ஈட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்திய வந்த இந்திய பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியமான செபி, ஹிண்டன்பர்க்கிற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதைத் தொடர்ந்து, செபி மீதும் ஹிண்டன் பர்க் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதில், அதானி நிறுவன பங்குகளை ஷார்ட் செல்லிங் முறையில் விற்ற முறைகேட்டில் கோடக் மகிந்திரா வங்கிக்குத் தொடர்பு உள்ளதை செபி வேண்டுமென்றே மறைத்து விட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஹிண்டன் பர்க் வெளியிட்டஅறிக்கையில் கூறியிருப்பதாவது: செபி 46 பக்க நோட்டீசை அனுப்பியுள்ளது. அதில் மகிந்திரா வங்கி பெயரை குறிப்பிடவில்லை. அதானி பங்குகளை ஷார்ட் செல்லிங் எனப்படும் பங்குகள் இல்லாமலேயே விற்று லாபம் ஈட்டும் முறையில் வர்த்தகம் செய்ய, கோடக் மகிந்திரா வங்கி ஒரு நிதியத்தை ஏற்படுத்தியது. அதனைப் பயன்படுத்தி, பெயர் தெரியாத முதலீட்டாளர் ஒருவர் இந்திய பங்குச்சந்தையில் அதானி பங்குகளை ஷார்ட் செல்லிங் முறையில் விற்று லாபம் ஈட்டியுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திய செபி, கோடக் மகிந்திரா வங்கியின் பெயரை மறைத்துள்ளது. கோடக் வங்கி ஏற்படுத்திய நிதியத்தை கே-இந்தியா ஆப்பார்சூனிட்டீஸ் பண்ட் எனவும் கோடக் பெயரை ‘கேஎம்ஐஎல்’ எனவும் குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம், இந்த வங்கியின் நிறுவனர் உதய் கோடக்கை காப்பாற்ற முயற்சித்துள்ளது. இவ்வாறு ஹிண்டன் பர்க் தெரிவித்துள்ளது.

Related posts

தேர்தல் தோல்வி எதிரொலி பாஜ அமைச்சர் ராஜினாமா

15 நாளில் 10 பால விபத்துகள்பீகாரில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுதலை மீண்டும் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்