அதானிக்கு நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் திருப்பம்: குஜராத் ஐகோர்ட் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

புதுடெல்லி: அதானி நிறுவனத்துக்கு வழங்கிய 108 ஹெக்டேர் புறம்போக்கு மேய்ச்சல் நிலத்தை திரும்ப ஒப்படைக்கும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில், முந்த்ரா துறைமுகம் உள்ளது. முந்த்ரா துறைமுகத்தை அதானி நிறுவனம் நடத்தி வருகிறது.கடந்த 2005ல் துறைமுகம் அருகே உள்ள நவினால் கிராமத்தில் 108 ஹெக்டேர் புறம்போக்கு மேய்ச்சல் நிலத்தை அப்போதைய முதல்வர் மோடி தலைமையிலான அரசு அதானிக்கு வழங்கியது.

இது கால்நடை மேய்ச்சலுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்த நிலத்தை அதானி நிறுவனத்துக்கு ஒதுக்கியதால் கால்நடைகளுக்கான தீவனத்துக்கு விவசாயிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். அரசின் முடிவை எதிர்த்துகுஜராத் உயர்நீதிமன்றத்தில் கிராம மக்கள் பொதுநலன் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 2014ம் ஆண்டு மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், கால்நடைகள் மேய்ச்சலுக்கு கூடுதலாக நிலங்களை ஒதுக்குவதற்கு துணை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தது. இதனால் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நிலம் ஒதுக்காததால், கிராமத்தினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். 2015ல் மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தது. அதில், கால்நடைகளின் மேய்ச்சலுக்கு 7 கிமீக்கு அப்பால் நிலம் ஒதுக்குவதாக அரசு தெரிவித்தது. இவ்வளவு துாரத்துக்கு கால்நடைகளை கொண்டு செல்வது சாத்தியம் இல்லை என்று கிராமத்தினர் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வால்,நீதிபதி பிரணவ் திரிவேதி அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு காணுமாறு கூடுதல் தலைமை செயலாளருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அரசின் கூடுதல் தலைமை செயலாளர் கடந்த 5ம் தேதி தாக்கல் செய்த மனுவில், அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 108 ஹெக்டேர் நிலத்தை திருப்பி எடுத்து கொள்ள அரசு முடிவு செய்துள்ளது என்றார். இதை எதிர்த்து அதானி நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த விசாரித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய்.கே.வி.விஸ்வநாதன் குஜராத் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டனர்.

Related posts

பாகிஸ்தானுக்கு செல்வதற்காக பாஸ்போர்ட் பெற போலியான ஆவணம் பயன்படுத்திய பெண் கைது

இன்ஸ்டாகிராம் காதலால் கர்ப்பிணியான சிறுமி: வாலிபருக்கு வலை

சென்னை பஸ், லாரி மீது மோதி விபத்து: 10 பேர் படுகாயம்