அதானி – அம்பானி குறித்து பேசுவதில்லை: ராகுலின் திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன? பிரதமர் மோடி கேள்வி

புவனேஷ்வர்: கடந்த பல ஆண்டுகளாக அதானி-அம்பானி குறித்து பேசி வந்த நிலையில் தேர்தல் தொடங்கியவுடன் அவர்கள் குறித்து ராகுல்காந்தி பேசாமல் நிறுத்தியது ஏன்? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி இருக்கிறார். மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, அரசியலமைப்பின் மதசார்பற்ற உணர்வை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மீறி வருகின்றது. வாக்கு வங்கி அரசியலுடன் சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் எதிர்கட்சிகளின் முயற்சியை அம்பலப்படுத்துவதே எனது பிரசார உரையின் நோக்கமாகும். அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்கள் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு இல்லை என்று முடிவு செய்துள்ளனர்.

பாஜ ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக இருந்தது இல்லை. இப்போது மட்டுமல்ல எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படாது. அதே நேரத்தில் யாரையும் சிறப்பு குடிமக்களாக ஏற்க முடியாது. அனைவரும் சமம். கடந்த பல ஆண்டுகளாக அதானி-அம்பானி விவகாரத்தை தொடர்ந்து ராகுல்காந்தி எழுப்பி வந்தார். ஆனால் தேர்தல் தொடங்கியதும் திடீரென அவர்களது பிரசார தொனி மாறிவிட்டது. இந்த திடீர் மாற்றம் ஏன்? எனது கருத்தை உடனடியாக அதிர்ரஞ்சன் சவுத்ரி ஊர்ஜிதம் செய்துள்ளார். அதானி-அம்பானி டெம்போவில் பணத்தை அனுப்பினால் அவர்கள் குறித்து பேசமாட்டோம் என்று ஒப்புக்கொண்டுள்ளார். அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவை எந்த தலையீடும் இன்றி சுதந்திரமாக பணியை செய்ய அனுமதிக்க வேண்டும்” என்றார்.

* அங்கேயும் நாங்கதான் இங்கேயும் நாங்கதான்
பிரதமர் மோடி கூறுகையில்,’ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது, ​​மக்களவையில் பா.ஜ கூட்டணி 400 இடங்களைத் தாண்டும்.தெற்கில் பாஜ தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும். கடந்த முறை இருந்ததை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம். கிழக்கு இந்தியாவில் கூட பா.ஜவுக்கு பெரும் ஆதரவு பெருகி வருவதை நாங்கள் காண்கிறோம். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்கில் இருந்து அதிக இடங்களைப் பிடிப்போம்’ என்றார்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு