ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்து: பாதுகாப்பு அதிகாரி, பொறியாளர்களிடம் விசாரணை குழு அதிகாரிகள் விசாரணை

ஆலந்தூர்: சென்னை கடற்கரை பறக்கும் ரயில் திட்டத்தில் 3ம் கட்டமாக வேளச்சேரி-பரங்கிமலை இடையே 5 கிமீ தூரத்தில் பறக்கும் ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் தில்லை கங்காநகர்-பரங்கிமலை வரை 500 மீட்டர் தூரத்திற்கு பணி துரிதமாக நடந்து வந்தது. வரும் ஜூன் மாதத்தில் பறக்கும் ரயில் சேவை தொடங்கும் என அறிவித்த நிலையில், தில்லை கங்காநகர் பகுதியில் ராட்சத தூண்களில் 300 டன் எடை கொண்ட மேம்பாலம் பொருத்தும் பணி பகுதி பகுதியாக நடந்து வருகிறது. அதன்படி நேற்று மாலை 6.15மணி அளவில் இரு தூண்களுக்கு இடையே ராட்சத மேம்பாலம் ஹைட்ராலிக் முறையில் தூக்கி நிலைநிறுத்தினர். மேல்தள தூண்களில் ஒரு பகுதியை நிறுத்திவிட்டு மற்ற பகுதியில் பாரம் தாங்கிகளை வைத்துவிட்டு பணியாளர்கள் டீகுடிப்பதற்காக கடைக்கு சென்றுள்ளனர்.

அந்த நேரத்தில் ஏராளமான வாகனங்கள் சென்றன. நடைபாதையில் மக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டனர். சிறுவர்கள் விளையாடினர். அந்த நேரத்தில் 300 டன் எடை கொண்ட ராட்சத மேம்பாலம் திடீரென பயங்கர சத்தத்துடன் சரிந்து விழுந்தது. இதனால் புழுதி காற்றுடன் நடைபாதை கிரானைட் சிலாப்கள் உடைந்து சுக்குநூறாகியது. நடைபயணம் செய்தவர்கள், விளையாடிய சிறுவர்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். கடை, வீடுகளில் உள்ள பாத்திரங்கள் சரிந்து பூகம்பம் போன்ற நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அமைச்சர் தா.மோ.அன்பரசன், பறக்கும் ரயில் திட்ட உதவி பொதுமேலாளர் மிதுல் கிஷோர், தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இன்று தென்னக ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் விபத்து நடந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேம்பாலம் விழுந்த பகுதிக்கு மக்கள் அதிகளவில் வந்து செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆதம்பாக்கம் போலீசாருடன் ரயில்வே பாதுகாப்பு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த பகுதி அருகில் செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. தற்போது ரயில்வே பணி நிறுத்தப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக கூறப்படுகிறது. இது குறித்து பாதுகாப்பு அதிகாரி, பொறியாளர்களிடம் விசாரணை குழுவினர் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி