அக்குபஞ்சர் மூலம் சிகிச்சை பிரசவத்தில் தாய், குழந்தை சாவு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பூந்துறை பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது நயாஸ். இவரது மகள் அக்குபஞ்சர் படித்து வருகிறார். இந்நிலையில் நயாஸ் கடந்த சில வருடங்களுக்கு முன் பாலக்காட்டைச் சேர்ந்த ஷமீரா (36) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். இதில் இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ஷமீரா மீண்டும் கர்ப்பமானார். நயாஸ், மனைவி ஷமீராவை திருவனந்தபுரம் நேமத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்திருந்தார். இந்நிலையில் ஷமீரா கர்ப்பிணியாக இருப்பது குறித்து அறிந்த அப்பகுதியை சேர்ந்த ஆஷா தொழிலாளர்கள் அவரது வீட்டுக்கு சென்று விசாரித்தனர். இதில் இதுவரை ஷமீரா மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைக்கு செல்லவில்லை என தெரியவந்தது. இதுகுறித்து கணவர் நயாசிடம் கேட்டபோது, மனைவிக்கு அக்குபஞ்சர் மூலம் பிரசவம் பார்க்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஷமீராவுக்கு திருவனந்தபுரம் பீமாபள்ளி பகுதியை சேர்ந்த சிகாப் என்பவர் அக்குபஞ்சர் சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. நேற்று முன்தினம் ஷமீராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. சத்தத்தைக் கேட்டு பக்கத்து வீட்டினர் அங்கு சென்றனர். பின்னர் வலுக்கட்டாயமாக ஷமீராவை அப்பகுதியினர் அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதிக ரத்தப்போக்கு காரணமாக சிறிது நேரத்தில் ஷமீராவும் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நேமம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஷமீராவின் கணவர் நயாஸ் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு

கட்சி சின்னம் கைவிட்டு போனது என்று சும்மா… குழந்தை போல் அழாதீர்கள்: உத்தவை விமர்சித்த ஏக்நாத் ஷிண்டே!

சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்