10 ஆண்டில் 1,562 தேவையற்ற சட்டங்கள் ரத்து; 5 ஆண்டில் 221 மசோதாக்கள் நிறைவேற்றம்: கடைசி நாளில் ஒன்றிய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டில் 1,562 தேவையற்ற சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், கடந்த 5 ஆண்டில் 221 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது 17வது லோக்சபாவின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாள் என்பதால், கடந்த 5 ஆண்டுகால பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியன் சாதனைகள் எடுத்து கூறப்பட்டன. பின்னர் மக்களவை நடவடிக்கைகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இனிமேல் மக்களவை தேர்தல் முடிந்து, புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் தான் மீண்டும் நாடாளுமன்றம் கூடும். இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாதா ஜோஷி அளித்த பேட்டியில், ‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 221 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் சில மசோதாக்கள் வரலாற்று சிறப்பு மிக்கவை, குறிப்பாக காஷ்மீருக்கான அரசியலமைப்புச் சட்டத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல், முத்தலாக்கிற்கு எதிரான சட்டம் உள்ளிட்ட பல முக்கிய சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மக்களவையின் செயல்பாடுகள் 148 சதவீதமாகவும், மாநிலங்களவையின் செயல்பாடுகள் 137 சதவீதமாகவும் இருந்தது.

17வது லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்த உறுப்பினர்கள் பழைய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இரண்டிலும் இருந்து பணியாற்றி உள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை 1,562 தேவையற்ற சட்டங்களை ரத்து செய்துள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் 545 அமர்வுகள் நடந்துள்ளன. இரு அவைகளிலும் சிறப்பாக பணியாற்றி ஒவ்வொரு உறுப்பினருக்கும் அரசியல் கட்சிக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்