நடிகை விஜயலட்சுமி விவகாரம்!: சீமானுக்கு எதிரான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்?..போலீஸ் பதில் தர ஐகோர்ட் ஆணை

சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் வாபஸ் பெறப்பட்ட நிலையில், சீமானுக்கு எதிரான வழக்கை 11 ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என போலீசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக சீமானுக்கு எதிராக கடந்த 2011-ல் நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விஜயலட்சுமி கொடுத்த புகாரில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மனுவில், 2011ம் ஆண்டு அளித்த புகாரை திரும்பப் பெற்றுக்கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், காவல்துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும், வழக்கை முடித்து வைத்திருந்த நிலையில், தற்போது அதே வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தனக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 2011ல் முடிக்கப்பட்ட வழக்கை 12 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் உள்நோக்கத்தோடு மீண்டும் விசாரிப்பதால் வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 2011ல் அளித்த புகாரை, 2012ல் விஜயலட்சுமி வாபஸ் பெற்றிருக்கிறார். 2023ல் அதே குற்றசாட்டுகளுடன் புதிதாக புகார் அளித்துவிட்டு அதையும் 1 மாதத்தில் வாபஸ் பெற்றுவிட்டதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை தரப்பில் இந்த மனு சம்பந்தப்பட்ட ஆவணங்கள், நகல்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அதனை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனு தொடர்பாக விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொடர்ந்து, வழக்கு ஆவணங்களை போலீசுக்கு தர சீமான் தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 2011, 2023ம் ஆண்டுகளில் விஜயலட்சுமியின் புகார்கள், வாபஸ் பெற்ற விவரங்களை பதில் மனுவாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். குறிப்பாக 2011-ல் அளித்த புகாரை வாபஸ் பெற்ற நிலையில் சீமானுக்கு எதிரான வழக்கை நிலுவையில் வைத்திருந்தது ஏன்? என்று விளக்கம் அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 26க்கு ஒத்திவைத்தார்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்