நடிகை நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவன் மீது மோசடி புகார்

லால்குடி: திரைப்பட இயக்குனரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் மீது சொத்து மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடியை பூர்வீகமாக கொண்டவர் திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர், நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்டுள்ளார். விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து. இவருடன் பிறந்தவர்கள் 9 பேர். இதில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம். இவர், லால்குடியில் தனது மனைவி பிரேமாவுடன் வசித்து வருகிறார். விக்னேஷ் சிவனின் சித்தப்பா குஞ்சிதபாதம், அவரது மனைவி சரோஜா கோயம்புத்தூரில் வசித்து வருகின்றனர். விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இந்நிலையில் லால்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாணிக்கம் மற்றும் குஞ்சிதபாதம் ஆகியோர் நேற்று ஒரு புகார் மனுவை அளித்தனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எங்களுக்கு தெரியாமல் எங்கள் தம்பி சிவக்கொழுந்து எங்கள் பொதுசொத்தை ஏமாற்றி விற்று விட்டார். எனவே மோசடியாக பொது சொத்தை விற்ற சிவக்கொழுந்துவின் வாரிசுகளான அவர் மனைவி மீனாகுமாரி, மகன் விக்னேஷ் சிவன், மகள் ஐஸ்வர்யா ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். நிலத்தை வாங்கியவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை செலுத்தி நிலத்தை மீட்டு முழுமையாக எங்களுக்கு கிடைக்க அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும். அவர்கள் மீது கிரிமினல் மோசடி வழக்கு தொடர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து குஞ்சிதபாதம் கூறுகையில், ‘இருதயத்தில் எனக்கு நான்கு குழாய்கள் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்காக எனக்குரிய சொத்தை விற்க முடிவு செய்தேன். ஆனால் விக்னேஷ் சிவனின் தந்தை சிவக்கொழுந்து சொத்தை ஏமாற்றி விற்று விட்டார். இது குறித்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் சொத்தில் ஒரு பங்கு மட்டுமே சிவக்கொழுந்துக்கு உரிமை உண்டு என்றும், மீதி பங்குகள் மற்ற எட்டு பேருக்கும் உரியது என தீர்ப்பு வந்துள்ளது. இதுகுறித்து பலமுறை நாங்கள் விக்னேஷ் சிவனிடம் கூறியும் அவர் பிரச்னையை தீர்க்க மறுக்கிறார். விக்னேஷ் சிவன் மற்றும் அவரது தாயார் மீனாகுமாரி உதவினால் மட்டுமே இந்த பிரச்னை தீரும். எனவே விக்னேஷ் சிவன் சொத்தை விற்க உதவ வேண்டும்’ என்றார். விக்னேஷ் சிவனின் சித்தி சரோஜா கூறுகையில், ‘எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. எங்களுக்கு குழந்தைகளும் இல்லை. எனது கணவரை காப்பாற்ற சொத்தை மீட்டு தர வேண்டும்’ என்றார்.

Related posts

ஒகேனக்கல்-காவிரி ஆற்றில் 13,000 கனஅடி நீர்வரத்து

விமான சாகசம் – கூட்டத்தில் யாரும் இறக்கவில்லை

பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் பலி!