கைதான சுங்கத்துறை ஆணையரிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள பரிசு பொருளை நடிகை நவ்யா நாயர் வாங்கியது அம்பலம்: குற்றப்பத்திரிக்கையில் பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம்: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சுங்கத்துறை கூடுதல் ஆணையாளர் சச்சின் சாவந்திடம் இருந்து பல கோடி மதிப்புள்ள நகைகள், பொருளை நடிகை நவ்யா நாயர் வாங்கி இருப்பதாக மத்திய அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. லக்னோவில் சுங்கத்துறை கூடுதல் ஆணையராக இருந்தவர் சச்சின் சாவந்த். இதற்கு முன்பு மும்பையில் அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் துணை இயக்குனராக இருந்தார். அப்போது சச்சின் சாவந்த் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது. தொடர்ந்து அவரை கடந்த ஜூன் மாதம் மத்திய அமலாக்கத்துறை கைது செய்தது.

அவரது செல்போனை பரிசோதித்தபோது சச்சின் சாவந்துக்கும், பிரபல மலையாள நடிகை நவ்யா நாயருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. பலமுறை நவ்யா நாயரை சந்திப்பதற்காக கேரளாவுக்கு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் மத்திய அமலாக்கத்துறை மும்பை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதில் கூறியிருப்பதாவது: சச்சின் சாவந்துக்கும், நடிகை நவ்யா நாயருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து உள்ளது. பலமுறை நவ்யா நாயரை சந்திப்பதற்காக சச்சின் சாவந்த் கேரளாவுக்கு சென்று இருக்கிறார். அவருக்கு விலை மதிப்புள்ள நகை, பொருட்களை பரிசாக அளித்து உள்ளார். இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடிகை நவ்யா நாயரிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அப்போது, ஒரே குடியிருப்பு பகுதியில் வசித்ததால் சச்சின் சாவந்தை தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அவருடன் சேர்ந்து தான் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளார். தனது மகனின் பிறந்த நாள் உள்பட நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பரிசுகள் கொடுத்தது உண்மைதான். நட்பின் பேரில் எனக்கு அவர் அன்பளிப்புகள் கொடுத்துள்ளார். பலமுறை குருவாயூர் செல்வதற்கு நான் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளேன். இது தவிர அவருடன் எனக்கு வேறு எந்த நெருக்கமும் கிடையாது. இவ்வாறு அமலாக்கத்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் நவ்யா நாயர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு