நடிகை ஜெயப்பிரதாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தம்

புதுடெல்லி: நடிகை ஜெயப்பிரதா 18 ஆண்டுகளுக்கும் மேலாக அவருக்குச் சொந்தமாக சென்னையில் உள்ள சினிமா தியேட்டரில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இஎஸ்ஐ நிலுவைத்தொகையை செலுத்தவில்லை என்று புகார் எழுந்தது. இதுதொடர்பாக எழும்பூரில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஊழியர்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,’கடந்த 10 ஆண்டுகளாக திரையரங்கம் பூட்டியே கிடந்தாலும், நிர்வாகம் தங்களின் இஎஸ்ஐ தொகையை பிடித்தம் செய்து வருகிறது. ஆனால் அதற்கான பணத்தை அரசு காப்பீட்டு நிறுவனத்திடம் டெபாசிட் செய்யாமல் உள்ளது’ என்று குறிப்பிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூரில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நடிகை ஜெயப்பிரதாவுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவரது அப்பீலை ஏற்க முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கவில்லை. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜெயப்பிரதா சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து இந்த வழக்கில் சரண் அடைவதில் இருந்து நடிகை ஜெயப்பிரதாவுக்கு விலக்கு அளித்து, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் இஎஸ்ஐக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை