நடிகை கவுதமியிடம் நிலத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டி மோசடி: பாஜ பிரமுகர், மகன்கள், மருமகள் உட்பட 12 பேர் மீது போலீஸ் வழக்கு

ராமநாதபுரம்: நிலத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டி, நடிகை கவுதமியிடம் ரூ.3.16 கோடி மோசடி செய்தது தொடர்பாக, பாஜ பிரமுகர் உள்ளிட்ட 12 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே சுவாத்தான் பகுதியில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 64 ஏக்கர் நிலத்தை நடிகை கவுதமிக்கு, காரைக்குடியைச் சேர்ந்த பாஜ பிரமுகர் அழகப்பன் வாங்கி கொடுத்துள்ளார்.

இதில், ரூ.56.47 லட்சம் மதிப்புள்ள நிலத்தை, மதிப்பை உயர்த்திக் காட்டி, போலியாக ஆவணம் தயாரித்து நடிகை கவுதமியிடம் ரூ.3.16 கோடிக்கு விற்று மோசடி செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் நடிகை கவுதமி புகார் அளித்தார். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கடந்த மே 6ம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது நடிகை கவுதமி நேரில் ஆஜராகி தான் ஏமாற்றப்பட்டது குறித்து விளக்கினார்.

தொடர்ந்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், நிலத்தின் மதிப்பை உயர்த்திக் காட்டி, நடிகை கவுதமியை ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து பாஜ பிரமுகர் அழகப்பன், அவரது மகன்கள் சொக்கலிங்கம், சிவஅழகப்பன், மருமகள் ஆர்த்தி, அவரது கூட்டாளிகள் ரமேஷ்சங்கர் ஷோனாய், பாஸ்கர், விசாலாட்சி, நாச்சியாள், நில புரோக்கர் நெல்லியான், தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கைது நடவடிக்கை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை