நடிகர் கருணாஸ் சபதம்: பாசிச பாஜ, அடிமை துரோகக் கட்சியான அதிமுகவை தோற்கடிப்போம்

முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித்தலைவர் சே.கருணாஸ் நேற்று அளித்த பேட்டி: பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் இணைய வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த நாடாளுமன்றத்தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்க வேண்டும். மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற, மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க ‘இந்தியா’ கூட்டணியை 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் திமுகவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது. இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்தியா பெருமுதலாளிகளின் கையில் சிக்கி, கார்பரேட்டின் கொள்ளைக் கூடாரமாகி விடும்.

கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பாஜ அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட, தமிழ்நாட்டில் அடிமை துரோகக் கட்சியான அதிமுகவை இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும். திமுகவிற்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக்கூட்டணியை 40 இடங்களிலும் வெற்றிப்பெற செய்ய திமுகவிற்கு எங்களது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட, அடிமை துரோக அதிமுகவை வீழ்த்த திமுகவுடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரசாரத்தை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

* ஐடி, ஈடி பாஜவின் கைப்பாவை: துரை வைகோ அட்டாக்
சென்னையிலிருந்து விமானம் மூலம் துரை வைகோ நேற்று திருச்சி சென்றார். அப்போது விமான நிலையத்தில் வைத்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக மற்றும் இந்தியா கூட்டணி ஆட்சி ஏற்றபின்னர் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை குறைக்கப்படும் மற்றும் சிஏஏ மற்றும் பொது சிவில் சட்டம் ரத்து செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தும். தேர்தல் அறிக்கை மக்களிடம் ஹீரோவாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பொழுது கடுமையான நிதி நெருக்கடி இருந்தது. இருந்தபோதும் பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியது. ஒன்றிய அரசு ஒத்துழைப்பு அளிக்காமலே பல திட்டங்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. ஒன்றிய அரசு நிதி அளித்து ஒத்துழைப்பு அளித்தால் கூடுதலாக பணியாற்றி இருக்க முடியும், ஒன்றிய அரசில் மாற்றம் வந்தால் மேலும் சிறப்பான பணிகளை செய்ய முடியும். வருமான வரி துறை, அமலாக்கத்துறை உள்ளிட்டவை பாஜவின் கைப்பாவையாக உள்ளது. இந்தியா முழுவதும் பாஜவை எதிர்க்கும் இயக்கங்கள் மீது சோதனை நடைபெறுகிறது. பாஜ கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறி உள்ளது. அதன் காரணமாக கூட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* பாஜ கொண்டு வந்த மக்களுக்கு எதிரான திட்டங்களை ஆதரித்தவர் எடப்பாடி பழனிசாமி: கனிமொழி எம்பி தாக்கு
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, நேற்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்தபொழுது மக்களுக்கு எதுவுமே செய்யாத, முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்பதுதான் வருத்தமாக இருக்கிறது. மக்களுக்கு எதிராக பாஜ கொண்டு வந்த அத்தனை திட்டங்களுக்கும் நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்த இயக்கம்தான் அதிமுக. அப்பொழுது முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள். பெருமழை வெள்ளத்தால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளும், தென்மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டபோது எட்டிக்கூட பார்க்காத பிரதமர் மோடி தேர்தல் வந்தவுடன் தமிழகத்தை சுற்றி சுற்றி வருகிறார். இதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

* ஈடி, ஐடிதான் பாஜவின் அதிகாரப்பூர்வ கூட்டணி: முத்தரசன் கலாய்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஆளுநர் ரவியின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக பாஜவுடன் கூட்டணி வைக்கவில்லை. அதனால் அமலாக்கத்துறை தனது பணிகளை தொடர்ந்து செய்கிறது. பாஜவுக்கு அதிகாரப்பூர்வமான கூட்டணி என்பது அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் தான். பாஜவுக்கு பணியவில்லை என்றால் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை சோதனை நடைபெறும். திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்க சிறப்பான தேர்தல் அறிக்கை. யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பதற்கு இணங்க சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திவிட்டு தற்போது குறைப்பது வேடிக்கையாக உள்ளது. ஒட்டகத்தின் முதுகில் அதிக பாரம் ஏற்றிவிட்டு, ஒட்டகம் களைப்படையும் போது குண்டூசி அளவுக்கு பாரம் குறைப்பது போல் மோடி அரசு செயல்படுகிறது. மக்களை ஒட்டகம் போல் கருதுகிறது ஒன்றிய அரசு. மோடியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து இறக்குவதே முதல் வேலை.

* எங்கள் வேட்பாளரை கைது செய்ய சதி: துரைமுருகன் பகீர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று திறக்கப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில்,‘தேர்தல் நேரத்தில் ஐடி ரெய்டு மட்டுமல்ல இன்னும் பல செய்வார்கள். குறிப்பாக சொல்லப்போனால் எங்கள் வேட்பாளரான செல்வாக்கு மிக்க வேட்பாளரை போய் கைது பண்ணுங்க, எப்ஐஆர் போடுங்க என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு மேல் இடத்தில் இருந்து தகவல் வந்திருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. தமிழகத்தில் நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்’, என்றார்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்