நடிகர் தர்ஷன் வீட்டு உணவு கேட்ட வழக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை நாடுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு

பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன், போலீசாரின் விசாரணை முடிந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையில் சிறையில் இருக்கும் தர்ஷனுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் நடிகர் தர்ஷன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அவரது வக்கீல் கடந்த 10ம் தேதி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கர்நாடக சிறை சட்டம் 1963, 30 மற்றும் 32வது விதியின் கீழ் விசாரணைக் கைதிக்கு வீட்டில் இருந்து கொண்டுவரும் உணவு வழங்க அனுமதி உள்ளது.

ஆகவே வீட்டில் சமைக்கும் உணவு வழங்கவும் மற்றும் ஆடை, மெத்தை, தலையணை வழங்க ஆகியவை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். அம்மனு கடந்த 11ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பு வக்கீல் வாதம் செய்ததை தொடர்ந்து மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதுதொடர்பாக ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 18ம் தேதி ஒத்திவைத்திருந்தது. அதன்படி, இவ்வழக்கு 18ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வக்கீல் கால அவகாசம் கேட்டதால், விசாரணையை ஜூலை 19ம் தேதிக்கு (நேற்று) நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நேற்று இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற தனிநீதிபதி எஸ்.ஆர்.கிருஷ்ண குமார், இந்த வழக்கில் என்னால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. முதலில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனு தாக்கல் செய்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் விசாரணையில் திருப்தியில்லை என்றால், அதன்பின்னர் உயர்நீதிமன்றத்திற்கு வரவேண்டும். நாளை (இன்று) இதுகுறித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுங்கள். அந்த மனுவை விசாரித்து நீதிமன்றம் ஒரு வாரத்தில் முடிவை சொல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவிட நீதிபதி மறுத்துவிட்டார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை