திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு கலப்பட விவகாரம்; எங்கள் உணர்வுகள் புண்பட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா?… நடிகர் பிரகாஷ்ராஜிக்கு பவன்கல்யாண் கேள்வி

திருமலை: திருப்பதி லட்டு விவகாரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்த நிலையில், எங்கள் உணர்வுகள் புண்பட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா? இதுதான் நீங்கள் பேசும் மதச்சார்பின்மையா? என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதற்காக ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டு குண்டூரில் உள்ள தசாவதார வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் கடந்த 22ம் தேதி சிறப்பு பூஜை செய்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், 11 நாட்கள் பரிகார தீட்சை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் ‘இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.

இதில் எதற்காக தேசிய அளவில் அச்சத்தை ஏற்படுத்துகிறீர்கள்’ என பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் விஜயவாடாவில் உள்ள துர்கா மல்லேஸ்வர சுவாமி கோயிலில் நேற்று நடந்த சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் பவன் கல்யாண், அம்மனை வழிபாடு செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: சனாதன தர்மத்தை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வது நமது பொறுப்பு. திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் எனக்கு நல்ல நண்பர். அவர் மீது எனக்கு அளவற்ற மரியாதை உண்டு. ஆனால் இந்து தர்மத்தை கடைபிடிப்பவர்கள் சனாதன தர்மத்தையும், புனிதத்தையும் மீறும்போது பேசுவது கூட தவறு என்று சொன்னால் எப்படி?,

இதே தவறு மற்ற வழிபாட்டு தலங்களில் நடந்தால் இப்படி தான் பிரகாஷ் ராஜ் பேசுவாரா? நாட்டில் என்ன நடந்தாலும் பேச இந்துக்களுக்கு உரிமை இல்லையா? இந்து தெய்வங்களை நையாண்டி செய்வதையும், பலவிதமான கேலிகள் செய்வதையும் பார்த்துக்கொண்டு உட்கார்ந்து இருக்க வேண்டுமா?, எங்கள் உணர்வுகள் புண்பட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டுமா? இதுதானா நீங்கள் பேசும் மதச்சார்பின்மை? திரைத்துறையினரிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன். சனாதனம் தொடர்பான விஷயங்களில் கேலி செய்வது ஏற்புடையதல்ல. சனாதன தர்மம் காக்க இறுதி வரை நான் போராடுவேன், தேவைப்பட்டால் உயிரையும் கொடுக்க தயார். இவ்வாறு அவர் கூறினார்.

தர்மா ரெட்டி தலைமறைவு
பவன் கல்யாண் கூறுகையில், ‘இவ்வளவு பெரிய விவகாரம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அப்போதைய செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமறைவாக உள்ளார். தர்மா ரெட்டியின் மகன் இறந்து 11 நாட்கள் ஆவதற்கு முன்பே கோயிலுக்குள் செல்லாமல் அவரால் இருக்க முடியவில்லை’ என்றார். இந்தியா திரும்பியதும் பதில் அளிக்கிறேன் துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு பதிலளித்து நடிகர் பிரகாஷ்ராஜ், ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் நான் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன். வரும் 30ம் தேதி இந்தியா வருகிறேன். அங்கு வந்த பிறகு பவன் கல்யாண் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் நான் விவரமாக பதில் அளிக்கிறேன். நேரம் இருந்தால் நான் போட்ட பதிவை மீண்டும் ஒருமுறை படிக்கவும்” என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை: அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்

தவெக மாநாடு தொண்டர்களுக்கு விஜய் திடீர் கட்டுப்பாடு

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மனு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு