புதுசா சேர்ந்த நடிகர் உள்பட தேசிய கட்சியில் மாநில தலைவர் பதவியை பிடிக்க நடக்கும் குடுமிபிடி சண்டை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தாய் கட்சிக்கே திரும்ப பேச்சுவார்த்தையில் இறங்கிட்டாங்களாமே தாமரை நிர்வாகிகள்..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வடமாநில நதி பெயர் கொண்ட மாவட்ட தாமரை கட்சியில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் தங்களின் தாய் கட்சிக்கு செல்ல பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்து விட்டனராம்.. இந்த நாடாளுமன்ற தொகுதியில் தாமரை கட்சி சார்பில் தொகுதிக்கு தொடர்பே இல்லாத வேட்பாளர் திடீரென இறக்குமதி செய்யப்பட்டாரு.. நிதி நிறுவன மோசடி சர்ச்சை, வேட்பாளர் யார் என்றே மக்களுக்கு தெரியாதது, தேர்தல் செலவு பணத்தை கட்சி நிர்வாகிகள் ஆளாளுக்கு சுருட்டியதுன்னு பல பிரச்னைகளுக்கு இடையே, அந்த வேட்பாளர் தேர்தலில் டெபாசிட்டை காப்பாற்றியதே பெரும்பாடாக போய்விட்டதாம்.. மாதத்திற்கு ஒரு ஒன்றிய அமைச்சர் வருகை, வாரந்தோறும் மண்டபத்தில் நிர்வாகிகள் கூட்டம்னு கரன்சி கொட்டப்பட்டு, இனி நாங்கள் தான் எல்லாம் என கடந்த சில ஆண்டுகளாக ஆட்டம் போட்ட அக்கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் முடிவு பெருத்த அடி கொடுத்துள்ளதாம்.. இனி இது சரிப்படாது, கவுரவமாக ஏற்கனவே இருந்த தாய் கட்சிக்கே சென்றுவிடலாம் என எண்ணிய தாமரை கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பலர், அவரவர் ஏற்கனவே இருந்த தாய் கட்சி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்து விட்டனராம்.. இந்த பேச்சுவார்த்தைக்கான லிஸ்டில் தற்போதைய மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி, மாநில நிர்வாகிகள் பலரும் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேர்தல் ரிசல்ட்டுக்கு அப்புறம் சைலண்டில் இருந்து வரும் வைத்தியானவரை சமாதானம் செய்யும் முயற்சியில் தேனிக்காரர் ஈடுபட்டிருக்கிறாராமே..’’ என சைலன்ட்டாவே கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் ‘வைத்தியானவர்’ தேனிக்காரர் அணியில் இருந்து வருகிறாரு.. டெல்டா மாவட்டம் முழுவதும் இவரது கட்டுப்பாட்டுக்குள் அவரது ஆதரவாளர்கள் இருந்து வர்றாங்க.. தேர்தல் ரிசல்ட்டுக்கு பின்னர் வைத்தியானவர் திடீரென சைலண்டாக இருந்து வருகிறாராம்… தேனிக்காரருடன் பேசுவதையும் அவர் தவிர்த்து வருவதால் தேனிக்காரருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்… இதற்கான காரணமும் தேனிக்காரரால் கண்டுபிடிக்க முடிய வில்லையாம்.. தேனிக்காரர் அணியில் இருந்து மாஜி அமைச்சர் பிரிந்து சென்று விட்டால் டெல்டா மாவட்டம் முழுவதும் ஒட்டு மொத்த ஆதரவாளர்களும் அவருடன் சென்று விடுவாங்க.. இதனால் தேனிக்காரர் நிலைமை மோசமாகி விடும் என்ற டாப்பிக் தான் டெல்டா மாவட்டம் முழுவதும் நிர்வாகிகளுக்குள் பேசிக்கிறாங்களாம்.. இந்த தகவல் தெரிய வந்த தேனிக்காரர், மாஜி அமைச்சரை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.. இந்த சமாதானத்தை வைத்தியானவர் ஏற்பாரா அல்லது புறக்கணிப்பாரா என்பது விரைவில் தெரியவரும்னு வைத்தியானவர் ஆதரவாளர்களுக்குள் பேசிக்கிட்டு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இல, தாமரை பார்ட்டியில எப்ேபா நடவடிக்கை, எப்போ நடவடிக்கைனு தொண்டருங்க குரல் ஒலிக்கத் தொடங்கிட்டாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மக்களவை தொகுதியில இலை பார்ட்டியில டாக்டர் போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்கல.. கட்சிக்கென்று இருக்குற வாக்குகள் கூட இவருக்கு கிடைக்கவில்லையாம்.. யாருமே எதிர்பார்க்காத வகையில சில பூத்துகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில வாக்குகள் கிடைச்சிருக்குது.. கடமைக்கு போட்டியிட்டது போல வேட்பாளரும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் இருந்தாங்க.. யாருமே வேலையே பார்க்காததால, தொண்டருங்க அதிருப்தியடைச்சிருக்காங்க.. பல பேர் மற்ற கட்சிக்கு விலைபோய்ட்டாங்களாம்.. இந்த புகார்கள் எல்லாம் சேலத்துக்கு போச்சு. ஆனா, அவரும் எந்த நடவடிக்கையும் எடுக்காம அமைதி காத்துவர்றாராம்.. இதனால உள்ளடி வேலை பார்த்தவங்க எல்லாம் ஜாலியா சுற்றி வர்றாங்களாம்.. இதேபோல, வெயிலூர் தொகுதியில தாமரை, பழம் பார்ட்டி மாவட்ட நிர்வாகிகளும் கூட்டணி சார்புல போட்டி போட்ட 3 எழுத்துக்காரிடம் கரண்சிய அபேஸ் செஞ்சிட்டாங்களாம்.. தங்களோட இஷ்டத்துக்கு ஆளுக்கு ஒரு பக்கம் பங்கு போட்டுக்கிட்டாங்களாம்.. இப்படி இல, தாமரை பார்ட்டியில துரோகம் செஞ்சவங்க மேல எப்போ நடவடிக்கை எடுக்கப்போறீங்கன்னு தொண்டருங்க கேட்கத் தொடங்கியிருக்குறாங்களாம்.. தொண்டர்களோட அதிருப்தி குரல் நாளுக்கு நாள் அதிகரிச்சுகிட்டே போகுதாம்..’’ என முடித்தார் விக்கியானந்தா.
‘‘புதுசா சேர்ந்த நடிகர் உள்பட தேசிய கட்சியில் மாநில தலைவர் பதவியை பிடிக்க ஒரே குடுமிபிடி சண்டையாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தேசிய கட்சியில் மலையான தலைவரும், முன்னாள் பெண் தலைவரும் மத்தியில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து தேர்தல் களத்துல குதிச்சாங்க.. ஆனா வெற்றிக் கனியை பறிக்க முடியல. அப்படி இருந்தும் ரெண்டு பேருல மலையான தலைவர் பதவியை எதிர்பார்த்து டெல்லியில் முகாமிட்டிருந்தாராம்.. மலையானவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தால் மாநில தலைவர் பதவியை பிடித்து விடலாம்னு தேசிய கட்சிக்குள் பலர் வரிந்து கட்டினார்களாம்.. பெண் எம்எல்ஏ, அல்வா தொகுதியின் எம்எல்ஏ என பலர் மனக்கோட்டை கட்டியிருக்காங்க.. ஆனால் புதிதாக யாருக்கும் அமைச்சர் பதவி இல்லைனு தேசிய தலைமை கைவிரித்து விட்டதாம்.. எனினும் தனது அரசு பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்த முன்னாள் பெண் தலைவர் மாநில தலைவர் பதவிக்கு காய் நகர்த்துகிறாராம்.. நான்தான் கட்சியை வளர்த்தேன்னு சொல்கிறாராம்.. அதே நேரத்தில் புதிதாக கட்சியில் சேர்ந்த நடிகரும், நான் ஸ்டாரான ஆள், ஒரு கட்சி நடத்தியவன் என்பதால் தலைவர் பதவியை தாருங்கன்னு அவரும் ஒரு கண் வைத்துள்ளாராம்.. அல்வா தொகுதியில் தோற்றுப்போன தேசிய கட்சியின் எம்எல்ஏவும், நான் தான் தமிழ்நாட்டில் அதிக ஓட்டு வாங்கினேன்.. எனக்கு தான் தலைவர் பதவியைத் தர வேண்டும் என்கிறாராம்.. கொங்கு மண்டல பெண்மணியும் தனது டெல்லி செல்வாக்கை பயன்படுத்தி காய் நகர்த்துகிறாராம்.. அண்ணன் எப்போ நழுவுவான், திண்ணை எப்போது காலியாகும் என்ற கதையாக தலைவர் பதவியை பிடிக்க தேசிய கட்சியில் ஒரே குடுமிப்பிடி சண்டையாக இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

காயல்பட்டினத்தில் வீட்டுமுன் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச் செல்லும் மர்மநபர்: வீடியோ வைரலால் பரபரப்பு

பெரம்பலூர் அருகே ஒன்றிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு