ஒருவரை பற்றி கருத்து தெரிவிக்கும்போது, அது ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் : நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஐகோர்ட் அறிவுரை!

சென்னை :ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஐகோர்ட் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்துக்கள் தெரிவித்ததாக, சென்னை ஆயிரம்விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில் முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக நடிகைகள் திரிஷா, குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கோரி நடிகர் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த மன்சூர் அலிகான் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது நிதி நெருக்கடியில் இருப்பதால் பெருந்தொகையான ரூ.1 லட்சம் அபராதத்தை செலுத்துவதற்கு மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “ஒருவரை பற்றி கருத்து தெரிவிக்கும்போது, அது ஏற்படுத்தும் தாக்கத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று தெரிவித்து, அபராத தொகை செலுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்கி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மனு மீதான விசாரணை பிப்ரவரி 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!