அதிரடி நடவடிக்கை

கர்நாடக அரசியல் என்றாலே கதம்ப சாதம் போன்றது என்று சொல்லிவிடலாம். கர்நாடகாவில் தேசிய கட்சிகளில் முக்கிய பதவிகளில் இருப்பவர்களின் அடிப்படை என்று பார்த்தால் ஜனதா பரிவாரில் இருந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். முன்னாள் பிரதமர் தேவகவுடா மதசார்பற்ற ஜனதா தளத்தை உருவாக்கிய போது பலர் அக்கட்சியில் இணைந்தார்கள். முதல்வர் சித்தராமையா கூட மஜத கட்சியில் மாநில தலைவராக இருந்துள்ளார். அப்போது விவசாயிகளின் வாக்கு வங்கி அக்கட்சிக்கு கணிசமாக இருந்தது. அதேபோன்று இஸ்லாமியர்களும் மஜதவை ஆதரித்தனர்.

2004ம் ஆண்டு பேரவை தேர்தலில் பாஜ 79 இடங்களிலும், காங்கிரஸ் 65 இடங்களிலும், மஜத 58 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜ ஆட்சிக்கு வரக்கூடாது என்று தேவகவுடா காங்கிரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் தரம்சிங் முதல்வராகவும், மஜத சார்பில் சித்தராமையா துணை முதல்வராகவும் பதவியேற்றார்கள். இந்நிலையில் தேவகவுடாவுக்கு தெரியாமல் 42 மஜத எம்எல்ஏக்களை சேர்த்துக்கொண்டு பாஜவுடன் கூட்டணி அமைத்த குமாரசாமி முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். துணை முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். இதனால் தேவகவுடாவுக்கும், குமாரசாமிக்கும் இடையே பனிப்போர் நிலவியது.

மதசார்பற்ற கட்சி, பாஜவுடன் கூட்டணி அமைத்ததால் பலர் அக்கட்சியில் இருந்து வெளியேறினர். அப்போது சித்தராமையா மஜதவில் இருந்து வெளியேறி மைசூருவில் அகிந்தா மாநாடு நடத்தினார். அப்போது அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை பார்த்து காங்கிரசார் அவரை கட்சியில் இணைத்துக்கொண்டனர். இதற்கிடையில் 18 மாதங்கள் முதல்வராக பதவி வகித்த குமாரசாமி, எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவியை விட்டுத்தர மறுத்ததால் அந்த கூட்டணி ஒன்றரை ஆண்டில் முறிந்தது குறிப்பிடத்தக்கது.

இதே நிலைதான் 2018ம் ஆண்டு எடியூரப்பா முதல்வராவதை தடுக்க காங்கிரஸ் மஜதவுடன் கூட்டணி அமைத்தது. அப்போதும் குமாரசாமியை முதல்வராக்க சம்மதித்தது. ஆனால் 2019ம் ஆண்டு 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை ஆபரேஷன் தாமரை மூலம் இணைத்துக்கொண்ட பாஜ ஆட்சியை பிடித்தது. மஜத-காங்கிரஸ் கூட்டணி முறிந்தது. இதற்கு சித்தராமையாவே காரணம் என்று அப்போது குமாரசாமி குற்றம்சாட்டினார். இப்படி கர்நாடக அரசியலில் எப்போதும் குழப்பம் வருவதற்கு காரணம், தேர்தலில் மெஜாரிட்டியை எந்த கட்சியும் பெறுவதில்லை.

அப்படியே பெற்று ஆட்சி அமைத்தாலும் உட்கட்சி பூசல், பணம், பதவி ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு எம்எல்ஏக்கள் மற்ற கட்சிக்கு கூண்டோடு சென்றுவிடுகின்றனர். எனவே, தாங்கள் இருக்கும் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்கள் மிகச்சிலரே. நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி என மஜத அறிவித்தது. இக்கட்சி மாநில தலைவர் சி.எம்.இப்ராஹிம் தனது ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி பாஜ-மஜத கூட்டணி அமைக்க அதிருப்தி தெரிவித்தார்.

இந்நிலையில் குமாரசாமி, அவரது மகன் நிகில் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அவரது பெயரில் சமூகவலைதளங்களில் கடிதம் வைரலானது. இதை அவர் மறுத்தாலும், கட்சி தலைவர் தேவகவுடா அவரை கட்சியில் இருந்து நீக்கியும், செயற்குழுவை கலைத்தும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் தனது மகன் குமாரசாமியை தற்காலிக மாநில தலைவராக நியமித்து உத்தரவிட்டுள்ளதால் மஜத கட்சியில் மட்டுமின்றி கர்நாடக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது