அதிரடி வேட்டை தொடங்கியது; சென்னையில் 6 ஆயிரம் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு: போலீஸ் கமிஷனர் அருண் இன்ஸ்பெக்டர்களுக்கு அதிரடி உத்தரவு

சென்னை: ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை ெபருநகரம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றப்பின்னணியில் உள்ள 6 ஆயிரம் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர்களுக்கு போலீஸ் கமிஷனர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பல ரவுடிகள் வெளிமாநிலங்களுக்கு தப்பி ஓடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருண் நியமனம் செய்யப்பட்டார். புதிய கமிஷனராக பதவியேற்ற போது, முதல் பணியாக சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, குற்றம் நடக்காமல் தடுப்பது, நடந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வது மற்றும் ரவுடிகளுக்கு அவர்கள் மொழில் பதில் அளிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கமிஷனராக அருண் பதவியேற்ற ஒரு மணி நேரத்தில் சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் மற்றும் உளவுத்துறை இணை கமிஷனர் தர்மராஜ், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்களுடன் ரவுடிகளை ஒடுக்குவது குறித்து ஆலோசனை நடத்தினர். ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்தில், சென்னை பெருநகர் முழுவதும் ஏ- பிளஸ், ஏ, பி, சி என 4 கேட்டகிரி ரவுடிகள் பட்டியலில் உள்ள ரவுடிகள் மற்றும் 2 குற்றங்களில் ஈடுபட்ட நபர்கள் என மொத்தம் 6 ஆயிரம் குற்றவாளிகளின் குறித்து முழு விபரங்களை 2 நாட்களுக்குள் அறிக்கையாக அளிக்க வேண்டும். தற்போது கொலை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகளில் 700 பேர் தற்போது சிறையில் உள்ளனர். அவர்களின் முழு குற்ற விபரங்களையும் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அதோடு இல்லாமல், தாதா மற்றும் ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்கள், திருடர்கள் என 6 ஆயிரம் குற்றவாளிகளின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று, அவர்கள் தற்போது இங்கு வசிக்கிறார்களா என்று உறுதி செய்ய வேண்டும். அப்படி அவர்கள் வசிக்க வில்லை என்றால், எங்கு இருக்கிறார்கள் என்ற விபரங்களை சேகரிக்க வேண்டும். இந்த பணிகள் அனைத்தும் துணை கமிஷனர்கள் நேரடி கண்காணிப்பில் உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் செய்ய வேண்டும் என்ற உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு காவல் நிலையய எல்லையில் கொலை உள்ளிட்ட கொடுங் குற்றங்கள் நடப்பதற்கு முன் சம்பந்தபட்ட குற்றவாளிகளை இன்ஸ்பெக்டர்கள் கைது செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்படுவார் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் குற்றவாளிகளுடன் நேரடியாவும், ரகசியமாகவும் தொடர்பில் உள்ள இன்ஸ்பெக்டர்கள் முதல் காவலர்கள் வரையிலான பட்டியலை உளவுத்துறை அளிக்க வேண்டும் என்று கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி 2 கூடுதல் கமிஷனர்கள் நேரடி கண்காணிப்பில் இன்று காலை முதல் சென்னை பெருநகர காவல் எல்லையில் உள்ள 104 காவல் நிலையங்களில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர்கள் ரவுடிகளின் பட்டியலின் படி அவர்களின் வீடுகளுக்கு சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவு ரவுடிகள் குறித்து தனியாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரவுடிகள் பட்டியல் ஏற்கனவே ‘பறந்து’ செயலி மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தாலும், அவர்களின் இருப்பிடத்திற்கு ெசன்று ஆய்வு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Related posts

சிலைகள் நிறுவுதல், கரைக்கும்போது நடைபெறும் ஊர்வலத்தின்போது 64,217 போலீசார் பாதுகாப்பு பணி!

கடலூரில் 72 கிலோ பிள்ளையார் லட்டு; 15 பேர் 3 நாட்களில் உருவாக்கினர்: பொதுமக்கள் வழிபாடு!

மேலும் ஒரு முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது!