எண்ணூரில் வெள்ள நீரில் எண்ணெய் கசிவு விவகாரம் மற்ற நிறுவனங்களின் மீது எடுத்த நடவடிக்கை என்ன? அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி

சென்னை: எண்ணூர் பகுதியில் வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக, தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு மீண்டும் நேற்று நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மாசுக்கட்டுப்பாடு வாரியம் தரப்பில், டிசம்பர் 19ம் தேதி எண்ணெய் கசிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டது. கசிவுக்கு முன் இருந்த நிலைக்கு கொண்டுவர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து தான் எண்ணெய் கசிவு வெளியேறியது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், நிலத்தடி நீர் மற்றும் கடல் நீரில் எண்ணெய் பாதிப்புகள் குறித்த ஆய்வுகள் முடிந்துள்ளது. அதிகமான கழிவுகள் பக்கிங்காம் கால்வாயில் இருந்து அகற்றப்பட்டது. தற்போது நீர்நிலைகளில் எந்த எண்ணெய் கலப்பும் ஏற்படவில்லை. எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 40 பறவைகள் மீட்கப்பட்டு மறுவாழ்வு வழங்கப்பட்டுள்ளது. ஐஐடி.யின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

எண்ணெய் அகற்றப்பட்டாலும் அடுத்த 3 மாதத்திற்கு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து சிபிசிஎல் நிறுவனம் தரப்பில், சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து கசிவு ஏற்படவில்லை. கசிவுக்கு காரணம் எந்த நிறுவனம் என தெரியாமல் சிபிசிஎல் மீது குற்றம் சாட்டுவது, விசாரணை இல்லாமல் தண்டனை வழங்குவதை போல உள்ளது. எண்ணூரில் பகுதியில் சுமார் 200 நிறுவனங்கள் செயல்படுகிறது. அதில் எத்தனை அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகிறது என அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட உறுப்பினர்கள், மற்ற நிறுவனங்கள மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, அதன் விவரங்களை ஏன் தெரிவிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினர். அடுத்த விசாரணையின் போது மற்ற நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்.27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related posts

வங்கி ஆவணங்களை கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் ஜூலை 8-ம் தேதி உத்தரவு

ஜார்க்கண்ட் முதலமைச்சராக இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்

கோயம்பேட்டில் பேருந்து உள்பட வாகனங்கள் எரிந்த சம்பவம்: கூலித் தொழிலாளி பழனிமுத்துவிடம் போலீஸ் தீவிர விசாரணை