லாகூரில் வன்முறையில் ஈடுபட்ட இம்ரான் கான் ஆதரவாளர்கள் மீது ராணுவ சட்டத்தின்கீழ் நடவடிக்கை

இஸ்லாமாபாத்: இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் மீது ராணுவ சட்டங்களின் கீழ் நடவடிக்கை தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தோஷகானா ஊழல் வழக்கில் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜரான இம்ரான் கானை துணை ராணுவ படையினர் கடந்த 9ம் தேதி கைது செய்தனர். இம்ரான் கானை கைதை கண்டித்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

லாகூரில் உள்ள ராணுவ தளபதி வீடு சூறையாடப்பட்டது. ராணுவ வாகனங்கள், அரசு சொத்துகளும் சூறையாடப்பட்டன. லாகூரில் வன்முறையில் ஈடுபட்டவர்களை ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்க பாகிஸ்தான் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் வன்முறைகளில் ஈடுபட்டவர்களை ராணுவ சட்டங்களின்கீழ் விசாரிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் அசீம் முனீர் தெரிவித்தார்.

Related posts

மதுரையில் விவசாயி குறித்து ஆபாசமாக பேசிய விவகாரம்: சிறப்பு சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட்

ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவு

வினேஷ் போகத் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: மாமனார் கோரிக்கை