அதிரடி தீர்ப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கடந்த 2018 மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இதை தள்ளுபடி செய்து, ஆலையை இயக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால், வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும் சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர் நீதிமன்ற உத்தரவை தவறு எனக்கூற முடியாது. அதனால் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது” என கடந்த 21ம் தேதி உத்தரவிட்டார்.

அரசியல் காரணங்களுக்காகவே, இந்த ஆலை மூடப்பட்டது என்ற வேதாந்தா நிறுவனத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று முன்தினம் நடந்தது. இரு தரப்பிலும் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களை பதிவுசெய்துகொண்ட தலைமை நீதிபதி, “ஸ்டெர்லைட் ஆலையில் விதிமீறல்கள் பல இருப்பதால்தான் தமிழ்நாடு அரசும், சென்னை உயர் நீதிமன்றமும் உரிய முடிவு எடுத்துள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான கடமைகளில் ஒன்று. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பாக கையாண்டுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்ததில் வரம்பு மீறல் எதுவும் இல்லை” எனக்கூறினார். இதையடுத்து, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது. ‘‘நச்சு ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடிய மக்களுக்கும், தமிழ்நாடு அரசின் வலிமையான சட்டப்போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி இது. எத்தகைய ஆபத்தில் இருந்தும் மக்களை காப்போம்” என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளார்.

‘‘ஸ்டெர்லைட் ஆலையை மூட மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் 28 ஆண்டுகளாக போராடியதற்கு கிடைத்த வெற்றி இது. காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டு 13 அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு உச்ச நீதிமன்றத்தில் உரிய நீதி கிடைத்துள்ளது’’ என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். இறங்கி அடித்த உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, தூத்துக்குடி மாவட்ட மக்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!