சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த 16 காவல் அதிகாரிகளை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் காவல் ஆணையர் சங்கர் ஜிவால்..!!

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த 16 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் வகையில், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்து களவுப் பொருட்களை மீட்ட காவல் ஆளிநர்கள், குற்ற சம்பவங்களின்போது, விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கையும் களவுமாக கைது செய்யும் காவல் ஆளிநர்கள், ரோந்து வாகன காவல் குழுவினர்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்யும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து அவர்களது பணியைப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வருகிறார்.

1. அண்ணாசாலை பகுதியில் நண்பரை கொலை செய்த நபருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

கடந்த 2019ம் ஆண்டு இராயப்பேட்டை பகுதியில் வசித்து வந்த ரிக்கார் அலி (எ) நாசர் அலி, வ/36, த/பெ.ஜாபர் அலி என்பவர் கடந்த 08.12.2019 அன்று இராயப்பேட்டை பகுதியில் தனது நண்பரான அலிசேர், வ/39, த/பெ.மீர்முகமது அலி என்பவரிடம் பேசிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட வாய்தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த அலிசேர், ரிக்கார் அலி (எ) நாசர் என்பவரை கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார். இது குறித்து D-2 அண்ணாசாலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து குற்றவாளி அலிசேர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்படி வழக்கு விசாரணை நடைபெற்று வந்த அல்லிக்குளம் 20வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் திரு.T.சந்திரமோகன் (தற்போது J-7 வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளர்) மற்றும் நீதிமன்ற அலுவல் பணிபுரியும் முதல் நிலைக் காவலர் திருமதி.V.சக்திகுமார் ஆகியோர் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்தும் வந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த 24.04.2023 அன்று மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி அலிசேர்க்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதம் விதித்து கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.

2.வடக்கு கடற்கரை போக்குவரத்து காவல் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர், பிராட்வே பகுதியில் மயங்கி கிடந்த 70 வயது முதியவரை தக்க சமயத்தில் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.

B-1 வடக்கு கடற்கரை போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் திருமதி.S.அருணா என்பவர் கடந்த 04.05.2023 அன்று பிரோட்வே சிக்னல் அருகே பணியிலிருந்த போது, அங்கு சுயநினைவின்றி மயங்கி கிடந்த 70 வயது முதியவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தார்.

3.வளசரவாக்கம் பகுதியில் இரவு ரோந்து பணியின் போது, இருசக்கர வாகன திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் கைது.

R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.C.சுமதி, R-9 வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.S.செல்வராஜ், முதல் நிலைக்காவலர் திரு.T.சுரேஷ் (மு.நி.கா.58183), காவலர்கள் திரு.V.வீரமணி, (கா.50350) திரு.B.குணசேகரன் (கா.53230) , திரு.பாக்யராஜ் (கா.58063) ஆகியோர் கடந்த 04.5.2023 அன்று அதிகாலை வளசரவாக்கம் பகுதியில் இரவு ரோந்து பணியிலிருந்த போது, சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 2 நபர்களை மடக்கி பிடிக்க முயன்ற போது ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பினார்.

மற்றொருவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். போலீசாரின் விசாரணையில் பிடிப்பட்ட நபர் இளஞ்சிறார் என்பதும், அவர் அளித்த தகவலின் பேரில் மற்றொரு குற்றாளியான கஜேந்திரன், வ/19, என்பரையும் அன்றைய தினமே கைது செய்தனர். மேற்படி இருவரும் சேர்ந்து மாங்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்ததின் பேரில் இருவரும் ஆவடி காவல் ஆணையரகம், T-14 மாங்காடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

4. குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலுவையிலிருந்த 103 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் வசூலித்து F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய குழுவினர் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

F-3 நுங்கம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.M.செல்வகுமார், தலைமைக்காவலர்கள் திரு.B.பாலமுருகன் (த.கா.21085), திரு.S.சந்தோஷ்குமார் (த.கா.27089), முதல் நிலைக்காவலர் திரு.C.கார்த்திகை செல்வன், (மு.நி.கா.38872), திரு.S.ராமராஜன் (மு.நி.கா.45324) ஆகியோர் கடந்த 2021ம் ஆண்டு முதல் தற்போது வரை குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையிலிருந்த 103 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களிடமிருந்து ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் வசூலித்து சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

5.புழல் பகுதியில் FRS app மூலம் சோதனை செய்து பழைய குற்றவாளிகள் இருவர் அடையாளம் காணப்பட்டனர்.

M-3 புழல் காவல் நிலைய காவலர் திரு.P.ஆசிர்வாதம், (கா.எண்.55173), திரு.M.ராஜசேகர் (கா.53263) ஆகியோர் கடந்த 05.05.2023 அன்று அதிகாலை புழல் பகுதியில் Face Recognition Software என்ற முக அடையாளத்தை கொண்டு குற்ற நபர்களை அடையாளம் கணும் FRS செயலி மூலம் ராஜேஷ் (எ) டோரா ராஜா, நிதிஷ் ஆகிய 2 பழைய குற்றவாளிகளை அடையாளம் கண்டு இருவரை கைது செய்து M-3 புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து, குற்றவாளிகளை கைது செய்த 16 காவல் அதிகாரிகள், ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இன்று நேரில் அழைத்து, வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

Related posts

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்

அரசியல் அமைப்பை அழித்துவிட்டு சத்ரபதி சிவாஜி முன் பணிந்து பலனில்லை : பிரதமர் மோடியை தாக்கிய ராகுல் காந்தி

மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதி வழங்கி நிதியை ஒதுக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்