வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ரெய்டு: உறவினர்களுக்கு சொந்தமான 9 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

கள்ளக்குறிச்சி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீடு உட்பட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பண்ருட்டி நகராட்சி முன்னாள் தலைவராக இருந்தவர் பன்னீர்செல்வம். அதிமுகவை சேர்ந்த இவர் 2011 முதல் 2016ம் ஆண்டுவரை இவர் நகர்மன்ற தலைவராக பதவி வகித்து வந்தார். இவரது மனைவி சத்யா பன்னீர்செல்வம், 2016 முதல் 2021 வரை பண்ருட்டி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

அந்த கால கட்டத்தில் பண்ருட்டி பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சைக்கிள் ஸ்டாண்ட் உரிமம் வழங்குவதில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சட்டமன்ற உரிமை குழு தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தலைமையிலான குழுவினர் சில மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி நகராட்சியில் ஆய்வு நடத்தியபோது சைக்கிள் ஸ்டாண்ட் உரிமத்தில் ரூ.20 லட்சம் வரை முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. இது தொடர்பாக குழுவினர் அளித்த புகாரின்பேரில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி முறைகேடு நடந்ததை கண்டறிந்தனர்.

இதுபற்றி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்பி தேவநாதன் தலைமையிலான குழுவினர் கடந்த 28ம் தேதி காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு, அலுவலகம், பண்ருட்டி கந்தன்பாளையத்தில் உள்ள பன்னீர்செல்வத்தின் நண்பரும், கூட்டாளியுமான பெருமாள் (வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர்) வீடு, எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வரும் மோகன், பத்திர விற்பனையாளர் செந்தில்முருகா ஆகியோர் வீடுகள், சென்னையில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்து ஆவனங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனை நடந்த இரண்டு நாட்களுக்குள்ளாகவே இப்போது கள்ளக்குறிச்சி அதிமுக மாஜி எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று சோதனை நடத்தி உள்ளனர்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் கடந்த 2016-2021ம் ஆண்டு வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர் பிரபு. இவர் தற்போது அதிமுக மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். பிரபுவின் தந்தை அய்யப்பா தியாகதுருகம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த 2001-2006ம் ஆண்டு வரை தியாகதுருகம் ஒன்றிய சேர்மனாக பதவி வகித்தார். அதேபோல் இவரது மனைவி தைலம்மாள் கடந்த 2011-2016ம் ஆண்டு தியாகதுருகம் ஒன்றிய குழு பெருந்தலைவராக பதவி வகித்தார். அப்போது அய்யப்பா மற்றும் தைலம்மாள் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.6 கோடியே 25 லட்சத்து 3 ஆயிரத்து 485 ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலை கள்ளக்குறிச்சி டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான 43 பேர் 9 குழுக்களாக பிரிந்து தியாகதுருகத்தில் உள்ளஅதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு மற்றும் அவரது தந்தை அய்யப்பா ஆகியோர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின்போது வீட்டில் முன்னாள் எம்எல்ஏ பிரபு, அவரது மனைவி சவுந்தரியா, பிரபுவின் தாய் தைலம்மாள் ஆகியோர் இருந்தனர். அய்யப்பா வீட்டில் அய்யப்பாவின் மற்றொரு மகனான பிரதீப் இருந்துள்ளார். அவரது வீட்டுக்கு வெளியே நிறுத்தியிருந்த காரிலும் ஏதாவது ஆவணங்கள் உள்ளதா என அதிகாரிகள் சோதனை நடத்தினர். அய்யப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் சிகிச்சைக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெங்களூரு சென்றதாக கூறப்படுகிறது.

அதேபோல் தியாகதுருகம் அருகே கலையநல்லூரில் உள்ள பிரபுவுக்கு சொந்தமான பால் பண்ணை மற்றும் விளையாட்டு அரங்கம், அய்யப்பாவின் நெருங்கிய நண்பர் ராஜவேல், விருகாவூர் கிராமத்தை சேர்ந்த அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, இவரது உறவினரான தியாகதுருகம் கரீம்ஷாதக்கா பகுதியை சேர்ந்த லியாகத்அலி, விழுப்புரத்தில் உள்ள அய்யப்பாவின் மகள் வசந்தி, விழுப்புரம் பெரியகாலனி ஜிஆர்பி தெருவில் உள்ள வழக்கறிஞர் சுபாஷ் ஆகியோரின் வீடுகள் உள்பட 9 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மேற்கண்ட இடங்களில் நடந்த சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. காலை 6.45 மணியளவில் தொடங்கிய சோதனை தொடர்ந்து 15 மணிநேரத்திற்கு நீடித்தது. சோதனையில் 5.75 கோடி மதிப்பிலான 121 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சோதனை குறித்து தகவலறிந்து கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு, முன்னாள் அமைச்சர்கள் சிவி.சண்முகம், மோகன், முன்னாள் எம்பி காமராஜ், முன்னாள் எம்எல்ஏ அழகுவேலுபாபு மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பிரபு வீட்டில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்

குழந்தை தொழிலாளர் விவகாரம் சமாஜ்வாடி எம்எல்ஏ நீதிமன்றத்தில் சரண்

டெல்லி முதல்வராக அடிசி நாளை பதவியேற்கிறார்: முகேஷ் புதிய அமைச்சர்