சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் 2 அமைச்சர்கள், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்ததை எதிர்த்து தாமாக முன் வந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, ‘‘ இந்த இரு வழக்குகளிலும் விசாரணை அதிகாரியின் நடவடிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. இந்த வழக்குகளில் 2020வரை எதிர்ப்பு தெரிவித்த விசாரணை அதிகாரி, ஆட்சி மாறியதுடன் எதிர்ப்பு தெரிவிக்காமல் வழக்கில் ஆதாரமில்லை என்று தெரிவித்து குற்றச்சாட்டை முடித்துவைத்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார்’’ என்றார்.

அதற்கு அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், விசாரணை அதிகாரியின் விசாரணை முறையில் தவறு எதுவும் இல்லை என்றார். இதை கேட்ட நீதிபதி, இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களும், அரசு தரப்பும் ஒன்றாக இணைந்து செயல்பட்டுள்ளனர். துரதிருஷ்டவசமாக இந்த கூட்டணிக்குள் நீதித்துறையும் சிக்கியுள்ளது. இதுபோன்ற தவறை தற்போது தடுத்தால் தான் எதிர்காலத்தில் இது போன்று நடக்காது. தங்கம் தென்னரசை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்த விசாரணை அதிகாரி, 2021ம் ஆண்டில் மேலும் விசாரணை நடத்த வேண்டுமென கூறுகிறார்.

இதெல்லாம் வினோதமானது. வழக்கில் இருந்து விடுவிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த புலன் விசாரணை அதிகாரி, பின்னர் மேல் விசாரணைக்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அமைச்சர்கள் இருவரையும் விடுவித்த உத்தரவுகளும் ஒரே மாதிரியாக உள்ளன. நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது என்றார். அதற்கு அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளித்தார். அதற்கு நீதிபதி, தீர்ப்புகளை படித்துவிட்டு 3 நாளாக தூங்கவில்லை. யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்கை நீர்த்துப் போகவே செய்கின்றனர். இதே நடைமுறையை குப்பன், சுப்பன் வழக்குகளில் ஏன் செயல்படுத்தவில்லை. உண்மையில் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகள் நடத்தப்படும் விதம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது என்றார்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கடந்த 2021ம் ஆண்டுக்கு முன் வழக்குகளில் இருந்து விடுவிக்க கோரிய மனுக்களுக்கு பதிலளித்த புலன் விசாரணை அதிகாரிகள், வழக்கில் முகாந்திரம் உள்ளதாகக் கூறியிருந்தனர். ஆட்சி மாற்றத்துக்கு பின், வழக்குகளில் உண்மையை கண்டறிய மேல் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற புலன் விசாரணை அதிகாரிகள், வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மேல் விசாரணையில் கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், முதலில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கு ஆதரவாக கூடுதல் அறிக்கையையே தாக்கல் செய்ய முடியும் என்ற நிலையில், இந்த வழக்குகளில் ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்குகளை முடித்து வைத்து அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது வினோதமாக உள்ளது. இரு வழக்குகளிலும் 2012ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகளை சிறப்பு நீதிமன்றம் புறந்தள்ளியுள்ளது.

வில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தின் இந்த ஏமாற்று வித்தை அணுகுமுறையை மற்ற சிறப்பு நீதிமன்றங்களும் பின்பற்றுமானால், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் சேர்ந்து, ஊழல் வழக்குகளுக்கு இரங்கல் செய்தியை எழுதி விடும். எனவே, தங்கம் தென்னரசு மீதான வழக்கில் தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோரும், கே.கே.எஸ்.எஸ்.ஆர் வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி விசாலாட்சி மற்றும் சண்முகமூர்த்தி ஆகியோரும், லஞ்ச ஒழிப்பு துறையும் செப்டம்பர் 20ம் தேதி பதில் தர வேண்டும். இந்த இரு உத்தரவுகளை தலைமை நீதிபதியின் பார்வைக்கு ஐகோர்ட் பதிவாளர் அனுப்ப வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

Related posts

பயணிகளின் உடைமைகளை தவறவிடுவதில் ஏர் இந்தியா முதலிடம்!

3 புதிய குற்றவியல் சட்டம்.. மருத்துவர்களை சிறையில் அடைக்கும் தண்டனை பிரிவை நீக்குக: அமித்ஷாவுக்கு கலாநிதி வீராசாமி எம்பி கடிதம்..!!

தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு