அரசியலமைப்பு சட்டத்தின்படி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தற்போது சாத்தியமில்லை: ப.சிதம்பரம் கருத்து

சண்டிகர்: ‘தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியமில்லை’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறி உள்ளார். பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3வது முறையாக ஒன்றியத்தில் பொறுப்பேற்று 100 நாட்களை கடந்த நிலையில், நடப்பு ஆட்சிக் காலத்திலேயே ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் செயல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகின. இது குறித்து சண்டிகரில் நேற்று செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் சாத்தியமில்லை. அரசியலமைப்பு ரீதியாக தடைகள் அதிகம் உள்ளன.

குறைந்தபட்சம் அரசியலமைப்பில் 5 திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை இந்தியா கூட்டணி முற்றிலும் எதிர்க்கிறது. இதுதொடர்பான அரசியலமைப்பு திருத்தங்களை மக்களவைவிலோ, மாநிலங்களவையிலோ கொண்டு வந்து நிறைவேற்றும் அளவுக்கு பிரதமர் மோடியிடம் போதிய எண்ணிக்கையிலான எம்பிக்கள் பலம் இல்லை’’ என்றார். காங்கிரஸ் இடஒதுக்கீட்டை ஒழிக்கப் பார்ப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ப.சிதம்பரம், ‘’50 சதவீத இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்க வேண்டுமென நாங்கள் தான் கேட்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு கேட்கிறோம், மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வேண்டும் என்கிறோம். எனவே, பிரதமர் சொல்லும் அனைத்தையும் நம்பாதீர்கள்’’ என்றார்.

* திரிணாமுல், கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பு
திரிணாமுல் காங்கிரசின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் டெரெக் ஓ பிரையன் கூறுகையில், ‘‘ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயக விரோத பாஜவின் மற்றொரு மாய வித்தை. அரியானா, காஷ்மீர் தேர்தலுடன் மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் ஏன் அறிவிக்கப்படவில்லை? மகாராஷ்டிரா அரசின் மகளிர் நிதி உதவி திட்டத்தின் மூலம் பெண்கள் ஓட்டை கவர்வதற்காக அம்மாநில தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. மாநில அரசுகளிடம் இருந்து அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு பறிக்க முடியாது’’ என்றார்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு