விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 

பட்டுக்கோட்டை, நவ.9: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து பட்டுக்கோட்டையில் தீயணைப்புதுறையினர் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வரும் 12ம் தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது எப்படி? என்பது குறித்து தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பயிலக்கூடிய சுமார் 2,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீயணைப்புத்துறையினர் நேற்று துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் கலந்து கொண்டு பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? தீயிலிருந்து எப்படி தங்களை பாதுகாத்துக் கொள்வது? தீ பரவாமல் எப்படி தடுப்பது? என்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களிடத்தில் விளக்கிக் கூறினார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாணவருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த துண்டு பிரசுரங்களை தீயணைப்புத்துறையினர் வழங்கி அனைத்து மாணவர்களும் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட அறிவுறுத்தினர். நிகழ்ச்சியில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை