விபத்து நாடகமாடி லாரியுடன் சென்னைக்கு கடத்தினர் 2.5 டன் தக்காளியை கொள்ளையடித்த பாஜ நிர்வாகி காதலியுடன் கைது: வாணியம்பாடியை சேர்ந்தவர்கள்

பெங்களூரு: பெங்களூருக்கு தக்காளி ஏற்றி வந்த வாகனத்தை கடத்தி சென்று விற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜ நிர்வாகி, காதலியுடன் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருகிறார்கள். நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. இல்லத்தரசிகள் தக்காளி வாங்கி சாம்பாருக்கு பயன்படுத்த முடியாமல் உள்ளனர். விவசாயிகளிடம் இருந்து தக்காளி வாங்கும் இடைத்தரகர்கள் விற்பனையாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். எங்கு பார்த்தாலும் தக்காளிக்கான தேவை அதிகமாகவுள்ளது.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தாலுகாவை சேர்ந்த விவசாயி மல்லேஷ், அவரது நிலத்தில் பயிர் செய்திருந்த 2.5 டன் தக்காளியை கோலார் நகரில் உள்ள தக்காளி சந்தைக்கு வாகனத்தில் எடுத்து சென்று கொண்டிருந்தார். அவரது வாகனம் பெங்களூரு ஊரக மாவட்டம், ஆர்.எம்.சி யார்டு அருகில் காரில் ஒரு தம்பதி வந்து கொண்டிருந்தனர். ரிங்ரோடு பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது, தங்களது காரின் மீது லாரி மோதியதாக கூறி தக்காளி லோடு லாரியை வழிமறித்தனர். பின்னர் லாரியில் இருந்த விவசாயி மல்லேஷிடம், விபத்துக்கான இழப்பீடு கேட்டு வாக்குவாதம் செய்தனர். அவர் விபத்து ஏற்படாத நிலையில், எங்கிருந்து இழப்பீடு கொடுப்பது? என்று கேட்டார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பின், விவசாயியை மிரட்டி அவருடன் லாரியை கடத்தி சென்னைக்கு ஓட்டிச் சென்றனர். பின்னர் சென்னையில் அந்த தக்காளியை விற்பனை செய்ததில் கிடைத்த பணத்தைப் பகிர்ந்து கொண்டனர். பின்னர், வாகனத்தை மீண்டும் பெங்களூரு கொண்டுவந்து விட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், தக்காளியை கடத்தியது வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கோணாமேடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (எ) டீல் பாஸ்கர் என்பது தெரியவந்தது. இவருடன் தக்காளி கொள்ளையில் ஈடுபட்ட பெண் சிந்துஜா, கள்ளக்காதலி என்பது தெரியவந்தது. பாஸ்கர், திருப்பத்தூர் மாவட்ட பாஜ அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் மீது திருப்பத்தூர் மாவட்டம் காவலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு செம்மர கடத்தல் வழக்கும், ஆந்திராவில் 2 செம்மர கடத்தல் வழக்குகளும் நிலுவையில் உள்ளது. மேலும் வாணியம்பாடி தாலுகா காவல்நிலையத்தில் மோசடி வழக்கும் உள்ளது.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (வடக்கு பிரிவு) சிவபிரகாஷ் தேவராஜு கூறுகையில், ‘சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூரைச் சேர்ந்த விவசாயி மல்லேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், லாரியுடன் தக்காளியை கொள்ளையடித்து சென்ற தம்பதி உட்பட 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. தற்போதைக்கு பாஸ்கர், சிந்துஜா மட்டும் கைது செய்யப்பட்டனர். 200 சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் குற்றவாளிகள் சிக்கினர். தலைமறைவாக உள்ள மற்ற 3 குற்றவாளிகளான ராகேஷ், குமார், மகேஷ் ஆகியோரை தேடி வருகிறோம்’ என்றார். நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.120க்கும் மேல் விற்கப்படும் நிலையில், பயிரிடப்பட்ட தோட்டத்தில் இருந்து தக்காளியை கொள்ளையடித்து செல்லுதல், கடத்திச் சென்று விற்பனை செய்தல் போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே நடப்பதால் தக்காளி பயிரிட்டோர், வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்