விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை

தண்டையார்பேட்டை: விபத்தில் மூளைச்சாவு அடைத்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. பெரம்பூர் மேட்டுப்பாளையம் உப்பண்டி பாபு தெருவை சேர்ந்தவர் நாராயணன் (57). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி அம்லு (55). இவர்களுக்கு 4 மகன்கள். அதில் 3 பேருக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில் நாராயணன் கடந்த மாதம் 29ம் தேதி தனது மனைவி வேலை செய்யும் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு, காமராஜர் நகர் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நாராயணன் நேற்று மூளைச்சாவு அடைந்தார். தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர், நாராயணன் குடும்பத்தினரிடம் பேசி, அவரது உறுப்புகளை தானம் வழங்க கேட்டனர். அதற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து மருத்துவமனை முதல்வர் பாலாஜி தலைமையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நாராயணனின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் தானமாக பெறப்பட்டன. இதில் 4 உறுப்புகள் அரசு மருத்துவமனைக்கும், ஒரு உறுப்பு தனியார் மருத்துவமனைக்கும் அரசு விதிமுறைப்படி பதிவு செய்து காத்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்டன. நாராயணன் உடலுக்கு ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி மலர் வளையம் வைத்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினார். அப்போது ராயபுரம் பகுதிச் செயலாளர்கள் சுரேஷ், செந்தில்குமார், மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து